அஜித் நடிப்பில் வெளியான 'மங்காத்தா' படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிப்பதன் மூலம் இந்தி படங்கள் தயாரிப்பில் இறங்குகிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், லட்சுமி ராய், வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்த படம் 'மங்காத்தா'. யுவன் இசையமைத்த படத்தை க்ளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. 2011ம் ஆண்டு வெளியான இப்படம் வசூலிலும், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்றி தயாரிக்க இருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம். முன்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்பதை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.