தமிழ் சினிமா

குறும்படம் தந்த வாய்ப்பு: இயக்குநர் மணிபாரதி சிறப்புப் பேட்டி

ஆர்.சி.ஜெயந்தன்

ஒரு குறும்படத்தை எடுத்துவிட்டு இயக்குநராகும் இந்தக் கால கட்டத்தில் 10 ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்த அனுபவத்துக்குப் பிறகு ‘வெத்துவேட்டு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் மணிபாரதி.

“நகரமயமாகிவிட்ட இன்றைய கிராமங்களின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்ற ஆசையில் இப்படத்தை இயக்குகிறேன்” என்று பேச ஆரம்பித்தார்.

நீங்கள் சினிமாவுக்கு வந்தது எப்படி?

கரூர் மாவட்டத்தில் இருக்கும் பில்லூர் என்ற கிராமம்தான் என் சொந்த ஊர். வீட்டுக்கொரு கவிஞன் உருவாகி வந்த 90களில் எனக்கு புனைக்கதை மீது ஆர்வம் ஏற்பட்டது. ‘நிதர்சனம்’ என்ற நாவலை எழுதி வெளியிட்டேன். அதைப் படித்த இயக்குநர் திருப்பதிசாமி என்னை அழைத்து உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். சினிமா இத்தனை சீக்கிரம் அருகில் வந்துவிட்டதே என்று எண்ணியபோது அவர் மறைந்துவிட்டார்.

அதன்பிறகு மேலும் ஐந்து ஆண்டுகள் உதவி இயக்குநர் வாழ்க்கை. அதன்பிறகு எனக்கு முதல் படம் கிடைத்தது. ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக அது பாதியில் நின்றுவிட்டது. வாழ்க்கை வெறுத்துப்போய் சினிமாவே வேண்டாம் என்று சொந்த கிராமத்துக்குப் போய்விட்டேன். வாசிப்பு மட்டும்தான் என் ஒரே நண்பன்.

அப்துல் கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகத்தில் உள்ள “நீ தொலைத்த இடத்திலேயே தேடு” என்ற வரி என்னை மீண்டும் சென்னைக்கு இழுத்து வந்தது. இம்முறை மூன்று மெகா தொடர்களில் வேலை செய்தேன். மீண்டும் ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் குறும்படங்களை இயக்க ஆரம்பித்தேன். ‘சென்னை பேச்சிலர்ஸ்’ என்ற எனது குறும்படம்தான் எனக்கு இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

முதல் படத்துக்கு ‘வெத்து வேட்டு’ என்று தலைப்பு வைத்திருக்கிறீர்களே?

இதைப் பலரும் என்னிடம் கேட் டார்கள். கதாநாயகி மாளவிகா மேனன் ஒருபடி மேலேபோய் “படத் தின் தலைப்பை மாற்றினால்தான் நடிக்க வருவேன். என் பெயருக்கு முன்னால் படத்தின் பெயரையும் போட்டு ‘வெத்துவேட்டு மாளவிகா’ என்று செய்தி எழுதுவார்களாமே” என்று பிரச்சினை செய்ததில் முதல் கட்ட படப்பிடிப்பு நின்றுபோய்விட் டது. பிறகு கதையை முழுமையாக அவருக்குச் சொன்னதும்தான் பிரச்சினை தீர்ந்தது.

தலைப்பை மாற்ற முடியாத அளவுக்கு அப்படி என்ன கதை?

இப்படத்தின் நாயகன் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன். ஆனால் சூரியனுக்குக் கீழே தனக்குத் தெரியாத விஷயமே இல்லை என்று காட்டிக்கொள்ளும் மேதாவி. இவன் சொல்கிற பொய்கள் ஒருநாள் அவனைத் திருப்பித் தாக்கும் போது ஏற்படும் விளைவுகளும் அவன் அதை எப்படிச் சந்தித்தான் என்பதையும்தான் இதில் படமாக்கி இருக்கிறோம்.

இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் எல்லாவற்றிலும் நுனிப்புல் மேய்பவர்களாக இருக்கிறார்கள். இந்த குணங்கள் மாறும்போதுதான் இந்தியாவின் இளைஞர் சக்தி ஆற்றல்மிக்க மனித வளமாக மாறும் என்ற கருத்தை இதில் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறோம்.

கிராமத்துக் கதைகளுக்குக் கூட கொரியன் படங்களைக் காப்பியடிப் பது இங்கே சகஜமாகிவிட்டதே?

அதற்கு அவசியமே இல்லை, கீ.ராவும், நாஞ்சில் நாடனும், பூமணியும், பொன்னீலனும் எழுதிக் குவித்திருக்கும் இலக் கியத்தில் இல்லாத வாழ்க்கையா கொரியப் படங்களில் இருந்து விடப்போகிறது?

மணிபாரதி

SCROLL FOR NEXT