தமிழ் சினிமா

அரசியல் நோக்கத்தோடு மோடியை சந்திக்கவில்லை: நடிகர் விஜய் விளக்கம்

ஸ்கிரீனன்

எந்த அரசியல் நோக்கத்தோடும் மோடியை சந்திக்கவில்லை என்று நடிகர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து குஜராத் முதல்வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவையில் உள்ள அடுத்துள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு 7.10 மணிக்கு மோடி சென்றார். இதற்கு முன்னதாகவே மாலை 5.30 மணியளவில் நடிகர் விஜய், ஹோட்டலில் மோடியை சந்திப்பதற்காக காத்திருந்தார்.

7.20 மணிக்கு பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். சுமார் 10 நிமிடங்கள் இருவரும் பேசினர். இந்த சந்திப்பின்போது செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மோடியை சந்தித்தது ஏன் என்று நடிகர் விஜய் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், " ரொம்ப சாதாரண ஆளான என்னையும் மதித்து குருஜி நரேந்திரமோடி சந்தித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சென்ற முறை அவர் சென்னைக்கு வந்த போது என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தமையால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. மீண்டும் கோயம்புத்தூர் வருகை தரும் போது என்னை சந்திக்க வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்தார்கள். எனவே கோயம்புத்தூரில் வைத்து இன்று நான் நரேந்திரமோடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

இந்த சந்திப்பில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. இந்திய நாட்டின் மரியாதைக்குரிய தலைவர் என்னை சந்திக்க வேண்டும் என கேட்டதே எனக்கு பெருமைக்குரிய விஷயமாகும். அவரை சந்தித்த போது என்னிடம் அன்போடும், எளிமையாகவும் பேசினார். அவர் என்னிடம் என்னுடைய 21 வருட சினிமா வளர்ச்சியையும், அது சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களையும் பேசினார். நாட்டின் முக்கிய தலைவர் என்னைப் ப்ற்றி இந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார் என நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. நாங்கள் எந்த அரசியல் நோக்கத்தோடும் சந்திக்கவில்லை. அரசியல் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவும் இல்லை" என்று குறிப்பிட்டு இருந்தார்.

SCROLL FOR NEXT