தமிழ் சினிமா

வினு சக்கரவர்த்தி குரலில் பாடினேன்!- பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் சிறப்புப் பேட்டி

கா.இசக்கி முத்து

ஒருபக்கம் நடிகர், மறுபக்கம் பாடலாசிரியர் இரண்டுக்கும் நடுவில் பின்னணி பாடகர் என்று ஒரே நேரத்தில் கோலிவுட்டில் மூன்று முகம் காட்டுகிறார் அருண்ராஜா காமராஜ். ‘மான் கராத்தே’ படத்தில் நடித்துள்ள அவர், ‘பீட்சா’, ‘வில்லா’, ‘ஜிகர்தண்டா’, ‘பென்சில்’, ‘டார்லிங்’ என்று பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். தமிழ் சினிமா உலகில் வேகமாக வளர்ந்து வரும் இந்த இளம் பாடலாசிரியரைச் சந்தித்தோம்.

நீங்கள் சினிமாவுக்கு வந்தது எப்படி?

நானும் சிவகார்த்திகேயனும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். முதலில் டிவியிலும், பிறகு சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டிய சிவகார்த்திகேயன், பிறகு என்னையும் கைதூக்கி விட்டார். அவரது உதவியால் ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’ ஆகிய படங்களில் நடித்தேன்.

பாடலாசிரியர் ஆனது எப்படி?

இசைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கல்லூரியில் என்னுடைய சீனியர். அவருடன் இணைந்து ஒரு ஆல்பம் பண்ணலாம் என்று முன்பு முடிவு செய்திருந்தேன். ஆனால் சில காரணங்களால் அதைச் செய்ய முடியவில்லை. அந்த ஆல்பத்துக்காக நான் எழுதிய பாடல் சினிமாவுக்கு பயன்பட்டது.

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘பீட்சா’ படத்தில் இடம்பெற்ற ‘ராத்திரியை ஆளும் அரசன்’, ‘எங்கோ ஓடுகின்றாய்’ ஆகிய பாடல்கள்தான் நான் சினிமாவுக்காக முதலில் எழுதிய பாடல்கள்.

பாட்டு எழுதுவது மட்டுமின்றி சில பாடல்களை பாடவும் செய்திருக்கிறேன். ‘ஜிகர்தண்டா’ படத்தில் ‘டிங் டாங்’ என்ற பாடலை எழுதி வினு சக்கரவர்த்தி சார் குரலில் பாடினேன். மிமிக்ரி கலைஞன் என்பதால் எனக்கு அது எளிதாக இருந்தது. அதே போல ‘டார்லிங்’ படத்தில் வரும் ‘வந்தா மலை’ பாடலின் இடையே வரும் ராப் நான் பாடியதுதான்.

பாடல்கள் எழுத, நடிக்க வாய்ப்பு வரும்போது எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?

இந்த இரண்டு துறைகளையும் தாண்டி படங்களை இயக்கவேண்டும் என்பதே என் கனவு. இதற்காக ‘வேட்டை மன்னன்’ இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.

‘நாளைய இயக்குநர் 2’ நிகழ்ச்சியில் 5 குறும்படங்கள் இயக்கி விருதுகள் வாங்கியிருக்கிறேன்.

பாடலாசிரியர் என்றால் கவிதை எழுத தெரிந்திருக்க வேண்டுமே?

கவிதையெல்லாம் நான் எழுதியதில்லை. பாட்டு எழுதுவதற்காக நான் படிக்கவும் இல்லை. என்னுடைய பாடல்களே கவிதை நடையில் இருக்காது. பேச்சு மொழியில் தான் இருக்கும். ‘வந்தா மலை... போனா முடி... கட்டி இழு...’ - இந்த வரியில் என்ன கவிதை இருக்கிறது சொல்லுங்கள்? எந்த வார்த்தைகளைப் போட்டால் மக்களிடம் போய் சேருமோ அந்த வார்த்தைகளைப் போட்டு பாடல்கள் எழுதுகிறேன்.

உங்களை நெருங்கிய நண்பர் என்று ஜி.வி.பிரகாஷ் கூறி வருகிறாரே?

‘மதயானைக்கூட்டம்’ படத்தை முடித்த பிறகு அடுத்த படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் கதை கேட்பதாகச் சொன்னார்கள். நான் கதை சொல்லத்தான் ஜி.வி.யைப் பார்க்க சென்றேன். ‘கதை நல்லா இருக்கு. நாம பண்ணலாம்’ என்றார். அப்போது சிவகார்த்திகேயன் “அவன் பாட்டு நல்ல எழுதுவான். ஏதாவது பாடல் வாய்ப்பு கொடுங்க” என்று ஜி.வி.யிடம் சொன்னார்.

அப்படி தான் எனக்கு ‘பென்சில்’ படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அது ஹிட் ஆனதால் தொடர்ச்சியாக அவரது படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். இப்போது எனக்கு நெருங்கிய நண்பராகவும் ஆகிவிட்டார். அவர் என்னை நெருங்கிய நண்பர் என்று சொல்வது எனக்கு பெருமையாக இருக்கிறது.

SCROLL FOR NEXT