தமிழ் சினிமா

இயக்குநர் பூவிலங்கு அமீர்ஜான் காலமானார்

செய்திப்பிரிவு

'பூவிலங்கு', 'சிவா', 'வண்ண கனவுகள்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் அமீர்ஜான் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் அமீர்ஜான். மறைந்த இயக்குநர் பாலசந்தரிடம் பல ஆண்டுகளாக இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1984ம் ஆண்டு கவிதாலயா நிறுவனம் தயாரித்த 'பூவிலங்கு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்துக்கு பிறகு கொஞ்சம் இடைவெளிவிட்டு, ‘புதியவன்’, ‘நெஞ்சத்தை அள்ளித்தா’, ‘இளங்கன்று’, ‘ஓடங்கள்’, ‘நட்பு’, ‘தர்மபத்தினி’, ‘வண்ண கனவுகள்’, ‘துளசி’, ‘உழைத்து வாழ வேண்டும்’, ‘சிவா’ உள்ளிட்ட 18 படங்கள் இயக்கி இருக்கிறார் அமீர்ஜான்.

‘துளசி’ திரைப்படத்தில் மூட நம்பிக்கைகளை கடுமையாக சாடியிருக்கும் திரைப்படம் என்று பலரது பாராட்டையும் பெற்றது. திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி.வீரமணி அமீர்ஜானை பெரியார் திடலுக்கு வரவழைத்து அவருக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தினார்.

இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய பல்வேறு டி.வி தொடர்களுக்கு இணை இயக்குநராக அமீர்ஜான் பணியாற்றி இருக்கிறார். பல்வேறு டி.வி தொடர்களையும் இயக்கி இருக்கிறார்.

2014ம் ஆண்டு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், வீட்டிலேயே ஒய்வு எடுத்து வந்தார். இயக்குநர் பாலசந்தர் மறைந்த போது ஊன்றுகோல் உதவியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

சில நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று வந்தார். இயல்பு நிலைக்கு வந்தவுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸுக்கு போன் செய்யப்பட்டு, அது வருவதற்குள் அவருடைய உயிர் பிரிந்தது.

அமீர்ஜானின் உடல் சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருக்கு தவுலத் பாட்ஷா என்ற மகனும், ஆயிஷா பானு என்ற மகளும் உள்ளனர். அமீர் ஜானின் இறுதித் சடங்கு நாளை காலை நடைபெற இருக்கிறது.

SCROLL FOR NEXT