தமிழ் சினிமா

தொப்பி காட்சிகளை நீக்கிய தயாரிப்பாளர்: இயக்குநர் யுரேகா வருத்தம்

ஸ்கிரீனன்

தன்னிடம் சொல்லாமல் 15 நிமிட காட்சிகளை நீக்கி 'தொப்பி' படத்தை சிதைத்துவிட்டார் தயாரிப்பாளர் என இயக்குநர் யுரேகா வருத்தத்துடன் தெரிவித்தார்.

'தொப்பி' படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. படத்தின் இடைவேளையில் இயக்குநர் யுரேகா பத்திரிகையாளர் மத்தியில் பேசினார்.

எப்போதும் போல படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன் என்றெல்லாம் பேசுவார் என்று நினைத்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தன்னிடம் சொல்லாமல் காட்சிகளை தயாரிப்பாளரே குறைத்து விட்டார் என்று யுரேகா கூறினார்.

"'தொப்பி' படத்தின் திரைக்கதை சோர்வடையாத வண்ணமே அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் எனக்கே தெரியாமல் நீளத்தைக் குறைக்க வேண்டும் என்று நினைத்து படத்தில் இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் நிறைய வெட்டிவிட்டார். இதனால் படம் கந்தர கோலமாகிவிட்டது.

இன்று காலையில் நான் படத்தின் முடிவு பற்றி தெரிந்து கொள்வதற்காக ‘உதயம்’ திரையரங்கிற்கு சென்றிருந்தபோது படம் முடிந்து வந்த ரசிகர்கள் ‘படம் புரியவில்லை.. குழப்பமாக இருக்கிறது..’ என்று கூறினார்கள். பல நாட்கள் கஷ்டப்பட்டு இப்படத்தை படமாக்கியிருக்கிறேன்.

கடைசி நேரத்தில் படத்தின் தயாரிப்பாளரே இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. படத்தைப் பார்க்கும்போது என் படம் எந்த அளவுக்கு சிதைக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும்." என்று வருத்தத்துடன் கூறினார் இயக்குநர் யுரேகா.

SCROLL FOR NEXT