இளையராஜா 1001 படங்களுக்கு இசையமைத்திருப்பதை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டு இருக்கிறது.
பாலா இயக்கி வரும் 'தாரை தப்பட்டை' படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். அவரது இசையில் உருவாகி வரும் 1000-வது படம் என்ற பெயரை 'தாரை தப்பட்டை' பெற்றிருக்கிறது. படம் தாமதமானதால் 'ஷமிதாப்' முதலில் வெளியானது. 'ஷமிதாப்' இளையராஜா இசையில் உருவான 1001வது படமாகும்.
'ஷமிதாப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவோடு இளையராஜாவுக்கு பாராட்டு விழாவும் மும்பையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல், அமிதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தற்போது இளையராஜாவுக்கு பிரம்மாண்டமான வகையில் பாராட்டு விழா நடத்த தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டு இருக்கிறது. சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவில் இது குறித்து விவாதித்து இருக்கிறார்கள்.
"இளையராஜா தனது பாடல்களின் அத்தனை ராயல்டி பொறுப்பையும் தயாரிப்பாளர் சங்கத்திடம் கொடுத்திருக்கிறார். அதன்படி, இளையராஜா பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி நேரடியாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும். அதில் 40% தொகையை அப்படத்தின் தயாரிப்பாளருக்கு வழங்கிவிட்டு, மீதமுள்ள தொகையை இளையராஜாவிடம் தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கும்.
அதுமட்டுமன்றி இளையராஜா 1001 படங்களுக்கு இசையமைத்ததை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அனைத்து திரையுலகினரும் இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்." என்று தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.