இசையமைப்பாளர் ஜிப்ரான் தயாரித்த 'ஸ்வேயர்ஸ் கார்ப்ரேஷன்ஸ்' குறும்படம், கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது.
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் 'உத்தம வில்லன்' படத்துக்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான். இப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளிவர இருக்கிறது.
தனது இசைப் பணிகளுக்கு இடையே, நண்பன் ரத்திந்திரன் ஆர். பிரசாத் இயக்கியிருக்கும் 'ஸ்வேயர்ஸ் கார்ப்ரேஷன்ஸ்' குறும்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த குறும்படம் 2015ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது.
முழுக்க முழுக்க சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப்பட்டுள்ள 'ஸ்வேயர்ஸ் கார்ப்ரேஷன்ஸ்' குறும்படத்தை துருக்கி நாட்டை சேர்ந்த தயாரிப்பாளர்கள் பசாக் கேசிலர் பிரசாத் மற்றும் ஹக்கன் கண்டார்லி சார்பாக இசையமைப்பாளர் ஜிப்ரான் பொறுப்பேற்று தயாரித்திருக்கிறார்.
"ரத்திந்திரன் எனது சிறு வயது நண்பர். நல்ல சினிமா பற்றிய விஷயங்களை ஆராய்வது உண்டு. பல சர்வதேச திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் ஜெர்மனியில் இயக்கிய Frullings Erwachen என்ற படத்தொகுப்பு விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இருவரும் பல வருடங்களுக்கு முன் குறும்படம் ஒன்றை தயாரித்தோம். நீண்ட நாள் பிறகு தயாரிப்பு வேலைகளில் இறங்கியது நல்ல அனுபவமாய் இருந்தது. 'ஸ்வேயர்ஸ் கார்ப்ரேஷன்ஸ்' குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
ஒரு ரசாயன நிறுவன அதிகாரியை கொல்வதற்கு செல்லும் சுற்றுச்சூழல் ஆர்வலரின் பயணம் தான் 'ஸ்வேயர்ஸ் கார்ப்ரேஷன்ஸ்' கதை. 30 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்குறும்படத்தில் பாடலோ பின்னணி இசையோ கிடையாது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் ரத்திந்திரன் ஆர்.பிரசாத் இருவருமே பிரான்ஸில் மே 13 முதல் 23ம் தேதி வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கும், படத்தின் திரையிடலுக்கும் அழைக்கப்பட்டுள்ளனர்.