தமிழ் சினிமா

வித்தியாசமான கதைகள்தான் என் வெற்றிக்கு காரணம்: ரம்யா நம்பீசன் பேட்டி

மகராசன் மோகன்

தமிழ் சினிமாவில் இப்போது பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ரம்யா நம்பீசன். ‘டமால் டுமீல்’, ‘ரெண்டாவது படம்’, ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்று இவருக்கு கைநிறைய படங்கள். நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் பாடல்களும் பாடி வருகிறார். அதனால்தானோ என்னவோ படப்பிடிப்பில் கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் மியூசிக் ப்ளேயரில் பாடல் கேட்கத் தொடங்கிவிடுகிறார். ‘‘வானவில், வண்ணத்துப்பூச்சி, வட்ட வட்டமாய் பப்புள்ஸ் விடுவது இதெல்லாம்தான் எனக்கு பிடித்த விஷயம். இப்போது இந்த வரிசையில் இசையையும் சேர்த்துக்கொண்டேன்’’ என்றவரிடம் பேசத் தொடங்கினோம்.

தமிழ் சினிமா உலகில் ஓரளவு பரபரப்பாகிவிட்டீர்களே?

வித்தியாசமான கதை உள்ள படத்தினை தேர்ந்தெடுப்பதுதான் அதற்கு காரணம். கதையை கேட்கும்போதே ஏதோ ஒரு இடம் எக்ஸைட்டிங்கா இருந்துவிட்டால் அந்த வினாடியே நடிக்க ஓ.கே சொல்லிடுவேன். இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு படமும் அப்படித்தான். ‘ரெண்டாவது படம்’ ஆசிரியை கேரக்டர். கிராமத்து பெண்ணாக வருகிறேன். அதேபோல ‘டமாம் டுமில்’ படத்தின் கதையோட போக்கே.. செம ஜாலியாக இருக்கும். அப்படித்தான் இப்போ ஷூட் போய்க்கொண்டிருக்கும் ‘நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும்’ படமும். ஒவ்வொரு கேரக்டருமே ரொம்ப நாட்களுக்கு ரசிகர்கள் மனதில் படிந்து கிடக்கும்.

திடீரென பாடகி அவதாரம் எடுத் திருக்கிறீர்களே?

சினிமாவில் பின்னணி பாடகி யாக பயணிக்கப்போகிறோம் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. நான் பாடகி ஆனதற்கு மலையாள இசையமைப்பாளர் சரத் முக்கிய காரணம். கொஞ்சம் கொஞ்சம் கர்நாடக இசையில் ஆர்வமாக இருந்த என்னை குரல் நன்றாக இருக்கிறது என்று அவர்தான் பாடகியாக அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து டி.இமான் இசையில் ‘பாண்டியநாடு’ படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. இப்போது நான் நாயகியாக நடிக்கும் படங்களில் எல்லாம் குறைந்தது ஒரு பாடலையாவது பாடிவிடுகிறேன். இது எதிர்பாராத திரில்லாகவே இருக்கிறது.

தமிழ்த்திரையில் தொடர்ந்து மலையாள ஹீரோயின் களுக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதே?

எல்லா காலகட்டத்திலும் இது இருந்திருக்கிறது. தமிழிலிருந்து மலையாளத்துக்கும், மலையாளத்தி லிருந்து தமிழுக்கும் நாயகிகள் இடம் மாறி நடித்திருக் கிறார்கள். இப்போது மீடியா வளர்ச்சியால் அது பெரிய விஷயமாக தெரிகிறது. எங்க ஊரில் இருந்து அப்போது ஊர்வசி இங்கே வந்து கலக்கினாங்க. இங்கே இருந்து இப்போ ஜனனி ஐயர் கேரளாவில் அசத்திக்கிட்டிருக்காங்க. நல்ல ஆர்வமும், திறமையும் உள்ள நடிகைகள் எங்கும் சிறப்பா பிரதிபலிக்க முடியும்.

பொழுதுபோக்கு?

என்னோட சொந்த ஊரான கொச்சின்ல இருப்பதுதான் என் பொழுதுபோக்கே. நான் பரதநாட்டிய டான்ஸர். மேடை கிடைத்துவிட்டால் மணிக்கணக்காக நடனம் ஆடிக்கொண்டே இருப்பேன். முன்பெல்லாம் ஷூட்டிங் விட்டு வீட்டுக்கு வந்தால் நிறைய சாப்பிடுவேன். இப்போ டயட், பிட்னஸ் என்று நிறைய கெடுபிடிகள் இருக்கே. அதேபோல எந்த நேரத்தில் பாடல் வாய்ப்பு வரும் என்பது தெரிவதே இல்லை. அதனாலேயே குரல் வளத்தை முக்கியமாக பார்த்துக்கொள்கிறேன். தினமும் ஒரு மணி நேரம் பாடி பயிற்சி எடுத்துக்கொள்ள மறப்பதே இல்லை. இசை அந்த அளவுக்கு என்கூடவே டிராவல் ஆகுது.

SCROLL FOR NEXT