தனுஷ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'காக்கி சட்டை' திரைப்படம் முதல் நான்கு நாட்களில் ரூ.15.58 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
"இது சிவகார்த்திகேயனின் படங்களில் முதல் வாரத்தில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாகும். திங்கள் வரை இந்தத் திரைப்படம் ரூ.15.58 கோடியை வசூலித்துள்ளது. வெளியிட்டவர்களுக்கு நல்ல லாபகரமாக மாறியுள்ளது. சிவாவிற்கு தொடர்ச்சியாக 5-வது ஹிட் படமாக அமைந்துள்ளது" என வர்த்தக ஆய்வாளர் த்ரிநாத் கூறியுள்ளார்.
'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'எதிர் நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மான் கராத்தே' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'காக்கி சட்டை'யும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'எதிர்நீச்சல்' படத்தை இயக்கிய துரை செந்தில்குமாரின் இரண்டாவது படமே 'காக்கி சட்டை'. அனிருத் இசையமைக்க, ஸ்ரீதிவ்யா, பிரபு, விஜய் ராஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படத்தின் முதல் வார வசூல் சிறப்பாக அமைந்துள்ளது. இதைப் போலவே மான் கராத்தே படத்திற்கும் விமர்சனங்கள் கலவையாகவே இருந்தன. ஆனால் படம் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் லாபகரமாக அமைந்தது.