தமிழ் சினிமா

லிங்கா பிரச்சினையில் இழுப்பதா?- விஜய் தரப்பு ஆவேசம்

கா.இசக்கி முத்து

'லிங்கா' பிரச்சினையில் எந்தொரு விதத்திலும் விஜய் சம்பந்தபடவில்லை என்றும், தேவையில்லாமல் வதந்திகளை பரப்புகிறார்கள் என்றும் அவரது தரப்பில் தெரிவித்தனர்.

'லிங்கா' விநியோகஸ்தர்கள் தரப்பில் வைக்கப்பட்டிருந்த நஷ்ட ஈடு கோரிக்கைக்கு, தன்னால் 10% மட்டுமே தரமுடியும் என்று தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறினார்.

இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து, ரஜினி இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று பிச்சை எடுக்கும் போராட்டத்தை சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து வைக்கப்பட்ட பத்திரிக்கையாளார் சந்திப்பில், "ரஜினியை நஷ்ட ஈடு கொடுக்காதீர்கள். நீங்கள் கொடுத்தால் நாங்களும் கொடுக்க வேண்டும் என்று இரண்டு நடிகர்கள் தடுக்கிறார்கள்" என்று கூறினார்கள். அந்த நடிகர்கள் யார் என்று கேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டார்கள்.

இந்நிலையில் "நீங்கள் கொடுத்தால் தொடர்ச்சியாக நாங்களும் கொடுக்க வேண்டியது வரும்" என்று ரஜினியிடம் தெரிவித்து அவரை விஜய் தடுக்கிறார் என்று செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இது குறித்து விஜய் தரப்பிடம் கேட்டபோதுபோது, "விஜய் எந்த விஷயத்தில் 'லிங்கா' படத்தில் தலையிட்டு இருக்கிறாரா..? இல்லையே. தற்போது 'புலி' படத்தில் பாடல் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவரை இழுத்தால் பிரச்சினை பெரிதாக ஆகிவிடும் என்று நினைக்கிறார்கள்.

விஜய் எப்போதுமே யாருடைய பிரச்சினையிலும் தலையிடாதவர். அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று அமைதியாக இருக்கிறார். கலைச்சேவைக்கு மட்டுமே முதன்மை தருவார். இந்த விஷயத்தில் தேவையில்லாமல் ஏன் விஜய்யை இழுத்தார்கள் என்றே தெரியவில்லை. விஜய்க்கும், 'லிங்கா' விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை" என்றனர் விஜய் தரப்பினர்.

SCROLL FOR NEXT