தமிழ் சினிமா

திரை விமர்சனம்: தரணி

இந்து டாக்கீஸ் குழு

சென்னையில் வசிக்கும் சேகர் (ஆரி), கதிரேசன் (அஜய் கிருஷ்ணா), மகேஷ் (குமரவேல்) மூவரும் நண்பர்கள். கந்து வட்டிக்கு வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் அவமானப்படும் ஆரி, சரியான வேலை கிடைக்காமல் அல்லாடும் அஜய், சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி நொந்துபோகும் குமாரவேல் ஆகிய மூவரும் அடிக்கடி சந்தித்துத் தங்கள் சோகங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். துயரங்கள் விடிவின்றி நீளும் கட்டத்தில் மூவரும் பிரிவது என்று முடிவெடுக்கிறார்கள்.

அவர்கள் பிரிந்த பிறகு மூவரின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதுதான் கதை.

துக்கங்கள் தரும் வலியை வலிக்க வலிக்கச் சொல்கிறார் புது இயக்குநர் குகன் சம்பந்தம். கந்து வட்டிக் கும்பலின் குரூரமாகட்டும், தெருவில் என்சைக்ளோபீடியா விற்கும் போராட்டமாகட்டும், சினிமா வில் வாய்ப்புக் கிடைக்காமல் படும் அவமானமாகட்டும், எல்லாமே அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

இவர்கள் வாழ்க்கையில் வரும் திருப்பங்களும் அதன் பிறகு கதை நகரும் விதமும் வாழ்வின் நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எப்படி எதிர்கொள்ளக் கூடாது என்பதற்கான பாடங்களாக இருக்கின்றன.

குமரவேலின் பயணத்தில் இருக் கும் யதார்த்தமும் அழகியலும் மற்ற பயணங்களில் இல்லை. ஆரி பெரிய தாதாவாக மாறுவதும் அவர் திருந்துவதும் நம்பும்படி காட்சிப்படுத்தப்படவில்லை. அஜய் மேற்கொள்ளும் பயணத்தில் அவசரமாக நகரும் காட்சிகள் மனதில் தங்க மறுக்கின்றன.

இயக்குநர் சில காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். கந்து வட்டிக் கும்பல் புழங்கும் இடம், சென்னையின் பன்முக யதார்த்தங்களின் ஒரு முகத்தைக் கச்சிதமாகக் காட்டுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலை வைத்து முறைகேடாகப் பணம் சம்பாதிப்பவர்களின் உளவியல் நன்கு சித்தரிக்கப்படுகிறது.

மணல் கொள்ளை தொடர்பான காட்சியில் வசனங்கள் பிரச்சினையின் தீவிரத்தை நன்றாகச் சுட்டிக்காட்டுகின்றன. குமரவேலின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் யதார்த்தமாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தின் சிறந்த பகுதி இதுதான். தனக்கும் கூத்து தெரியும் என்பதைக் குமரவேல் காட்டும் இடம் அபாரமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கூத்து ஆசானின் பெண் ணின் காதல் ரசிக்கும்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தன் பெண்ணின் காதலைத் தந்தை எதிர்கொள்ளும் விதம் சுவாரஸ்யம்.

சாதுவாக இருந்து தாதாவாக மாறும் வேடத்தில் ஆரி பொருத்தமாகத்தான் இருக்கிறார். ஆனால் அவரது நடிப்புக்குச் சவால் விடும் அம்சம் எதுவும் கதாபாத்திரத்தில் இல்லை. தெருத்தெருவாக அலைந்து வேதனை யில் வாடுவதையும் பின் பகுதியில் ஏமாற்றுக்காரராக மாறுவதையும் அஜய் நன்றாகச் சித்தரிக்கிறார்.

மூவரில் வலுவான வேடம் அமையப்பெற்ற குமரவேல் சிறப் பாக நடித்திருக்கிறார். குறிப்பாக அரிதாரம் பூசாமல் ராவணனாக நடிக்கும் காட்சி அற்புதம். குமரவேலைக் காதலிக்கும் வேடத் தில் வரும் சாண்ட்ரா கொஞ்ச நேரமே வந்தாலும் கவர்கிறார்.

பா. என்சோன் இசையில் ஓரிரு பாடல்கள் பரவாயில்லை. கூத்துக் காட்சிகளில் பின்னணி இசை நன்றாக உள்ளது. வினோத் காந்தியின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகளும் குமரவேல் ராவணனாக நடிக்கும் காட்சியும் தனித்து நிற்கின்றன.

மூன்று கதாபாத்திரங்கள், மூன்று பயணங்கள், மூன்று அனுபவங்கள் என்பது வலுவான, சுவாரஸ்யமான திரைக்கதைக்கான அஸ்திவாரம்தான். அதை வைத்து அழகான மாளிகையைக் கட்டி எழுப்பியிருக்கலாம்.

யதார்த்தமான காட்சிகளை அழகியலுடன் எடுத்து, நடிகர்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தச் செய்திருக்கும் இயக்குநர், மற்ற பகுதிகளில் மேலும் மெனக்கெட்டிருக்கலாமே என்னும் ஆதங்கம் ஏற்படுகிறது.

SCROLL FOR NEXT