அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'என்னை அறிந்தால்' படத்தில் முதல் 6 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாக அறிவித்துள்ளனர்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'என்னை அறிந்தால்'. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் பிப்ரவரி 5ம் தேதி இப்படம் வெளியானது.
கெளதம் மேனன் - அஜித் முதல் முறையாக கூட்டணி அமைத்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால், படம் பார்த்தவர்கள் படம் மிகவும் நீளமாக இருப்பதாக கருத்து தெரிவித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து தற்போது 6 நிமிடக் காட்சிகளை படக்குழு நீக்கி இருக்கிறது. அனுஷ்கா அறிமுகமாகும் காட்சி மற்றும் அனுஷ்காவின் பாடல் ஆகிய முதல் காட்சிகளை நீக்கி இருக்கிறார்கள்.
படத்தின் தலைப்பு முடிந்தவுடன் நேரடியாக அஜித், அனுஷ்கா சம்பந்தப்பட்ட விமானக் காட்சியே முதல் காட்சியாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
வார விடுமுறை நாட்கள் முடிவடைந்துள்ளதால், இப்படம் ரசிகர்களிடையே எப்படி வரவேற்பு பெற்று இருக்கிறது என்பது இன்று (திங்கள்கிழமை) முதல் தெரியவரும்.