'என்னை அறிந்தால்' படத்திற்காக சிம்பு தெரிவித்த கருத்திற்கு நடிகர் ஆரி மன்னிப்பு கோரியுள்ளார்.
அஜித் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், 'என்னை அறிந்தால்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அப்படம் குறித்த கருத்துக்கள் வழக்கம் போல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.
"ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல தமிழ் படம் பார்த்துள்ளேன். தல அற்புதமாக நடித்துள்ளார். தல ரசிகர்களுக்கு சரியான விருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்" என ட்வீட் செய்தார் சிம்பு. சிம்புவின் இந்த கருத்திற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. அதற்கு சிம்பு எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் 'வெத்து வேட்டு' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட 'நெடுஞ்சாலை' நாயகன் ஆரி, சிம்புவின் கருத்திற்கு மன்னிப்பு கோரினார்.
"'என்னை அறிந்தால்' படத்தைப் பற்றி சிம்பு ஒரு ட்வீட் போட்டு பிரச்சினையான விஷயம் உங்களுக்கு எல்லாம் தெரியும். எனக்கு சிம்புவிற்கு அவ்வளவு பழக்கமில்லை. சிம்புவோட நல்ல மனசு என்னவென்றால் என்னோட 'நெடுஞ்சாலை' படத்திற்கு ட்ரெய்லர் காட்டி கருத்து கேட்டோம். அதற்கு உடனே முன்வந்தார். இயக்குநர் கிருஷ்ணாவிற்கு அவருக்கும் தான் பழக்கம் தான். எனக்கும் அவருக்குமில்லை.
அதே போல சமீபத்தில் வெளியான 'தரணி' படத்திற்கும் அதே போல கருத்து கூறினார். நான் அவரை ஒரு தடவை மட்டுமே சந்தித்து இருக்கிறேன். ஒரு சினிமாவை விமர்சனம் என்கிற பெயரில் எவ்வளவு சீக்கிரம் காலி பண்ண முடியுமோ அதை பண்ணுகிறார்கள். ஒரு படத்தில் வேலை செய்யுறமோ இல்லையே அது நல்ல வர வேண்டும் என்ற எண்ணம் சிம்புவிற்கு இருந்திருக்கிறது. அந்த நோக்கத்தில் மட்டுமே ட்வீட் பண்ணியிருக்கிறார். அவருடைய கடைசி ஒரு வார்த்தை சேர்ப்பு மிகப் பெரிய மனவருத்தத்தை உண்டு பண்ணிவிட்டது. சிம்புவிற்கும் எனக்கும் பழக்கமில்லை என்றாலும், சினிமாவை நேசிக்கும் மனிதர்கள் என்ற ஒற்றுமை இருக்கிறது. சிம்பு சார்பாக யாருடைய அவருடைய கருத்து யாருக்கு எல்லாம் மனவருத்தத்தை உண்டு பண்ணியதோ அவர்களிடம் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்." என்று இசை வெளியீட்டு விழா மேடையில் கூறினார் ஆரி.