'லிங்கா' பட இழப்பீட்டை தங்களால் பகிர்ந்துகொள்ள முடியாது என்று தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷிடம் ஈராஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது தெரியவந்துள்ளது
'லிங்கா' தயாரிப்பாளர் தரப்பில் இருந்து நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எவ்வளவு நஷ்ட ஈடு என்பது குறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முடிவு செய்ய இருந்தார்.
ஆனால், 'லிங்கா' இழப்பு கணக்கு வழக்குகளை பார்த்த தயாரிப்பாளர் "இவ்வளவு நஷ்டமா... என்னால் மட்டுமே இதனை ஈடுகட்ட முடியாது. இப்படத்தை என்னிடம் வாங்கிய ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று கூறிவிட்டு மும்பை சென்று ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் 'லிங்கா' தயாரிப்பாளர்களுக்கும் இடையே கணக்கு வழக்குகள் சரிபார்த்த திருப்பூர் சுப்பிரமணியம் வெளிநாட்டு சென்றதால் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருந்தது. நேற்று திருப்பூர் சுப்பிரமணியம் வெளிநாட்டில் இருந்து திரும்பி இருக்கிறார்.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கார்ப்பரெட் நிறுவனம் என்பதால் எங்களால் பணம் எல்லாம் தர முடியாது என்று ராக்லைன் வெங்கடேஷிடம் கூறிவிட்டது ஈராஸ் நிறுவனம் என்று நம்மிடம் தகவல் தெரிந்த நம்பகமான வட்டாரம் தெரிவித்தது.
நாளை காலை திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இருவரும் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார்கள்.
தற்போது இழப்பீடு தொகையில் இருந்து ஈராஸ் நிறுவனம் பின்வாங்கிவிட்டதால் தயாரிப்பாளர் மட்டுமே இழப்பீடு தொகை கொடுக்க இருக்கிறாரா அல்லது ரஜினியும் இணைந்து கொடுக்க இருக்கிறாரா என்பது நாளை தெரியவரும்.
ஈராஸ் நிறுவனம் பின்வாங்கியுள்ளதால், 'லிங்கா' இழப்பீடு தொகை விவகாரத்தில் சற்று இழுபறி ஏற்பட்டு இருக்கிறது. மேலும், ஈராஸ் நிறுவனம் தென்னந்திய பொறுப்பாளராக ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.