திரையுலகில் இருந்து நான் விலகப் போவதில்லை என்றும், பிளஸ் 2 தேர்வுக்குப் பின் புதிய படங்களுக்குத் தேதி ஒதுக்குவேன் என்றும் நடிகை லட்சுமி மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
கார்த்தி நடிக்கும் 'கொம்பன்' மற்றும் கெளதம் கார்த்திக் நடிக்கும் 'சிப்பாய்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். இதனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக ஒப்பந்தமானார்.
சில நாட்களில் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அதனைத் தொடர்ந்து விஷால் ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எந்த ஒரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகி இருந்தார்.
இந்நிலையில், லட்சுமி மேனன் அளித்த பேட்டியில் "தொடர்ச்சியாக கிராமத்து கதாபாத்திரங்கள் வருகிறது. அதனால் எனக்கு அலுப்பு ஏற்படுத்துகிறது. நான் உண்மையில் அந்த மாதிரியான பெண் கிடையாது" என்று பேட்டியளித்தைத் தொடர்ந்து திரையுலகில் இருந்து விலகுகிறார் என்று தகவல்கள் வெளியாகின.
இதற்கு லட்சுமி மேனன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். "நான் உண்மையில் திரையுலகில் இருந்து விலக இருக்கிறேன் என்று கூறவில்லை. ஏப்ரல் 6-ம் தேதி வரை எனக்கு பிளஸ் 2 பரீட்சை இருக்கிறது. அதற்கு பிறகு மீண்டும் படங்களில் நடிப்பேன்.
என்னிடம் நிறைய புது படங்களில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஏப்ரல் 6ம் தேதிக்கு பிறகு எந்த படத்தில் நடிப்பது என்று முடிவு செய்வேன்" என்று லட்சுமி மேனன் விளக்கம் அளித்துள்ளார்.