'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் அனிருத்.
'என்னை அறிந்தால்' படத்தைத் தொடர்ந்து 'வீரம்' சிவா இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் அஜித். இப்படத்தையும் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கிறார்.
இப்படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்கு செல்லும் முன்பு, படத்தின் அஜித்தின் லுக் எப்படியிருக்க வேண்டும் என்பதற்காக டெஸ்ட் ஷுட் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.
விரைவில் தொடங்கப்பட இருக்கும் இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் அனிருத். அனிருத் இசையமைக்க இருக்கும் முதல் அஜித் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் படம் மட்டுமன்றி, தெலுங்கில் ராம்சரண் நடிக்கவிருக்கும் படம், ஷங்கர் இயக்கும் அடுத்த படம் என தொடர்ச்சியாக பல்வேறு பெரிய இயக்குநர்களின் படங்களுக்கும் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.