தமிழ் சினிமா

லிங்கா இழப்பீடு பேச்சுவார்த்தையில் இழுபறி: விநியோகஸ்தர்கள் அவசரக் கூட்டம்

ஸ்கிரீனன்

'லிங்கா' இழப்பீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. இழப்பீடு கோரிய விநியோகஸ்தர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

'லிங்கா' தயாரிப்பாளர் தரப்பில் இருந்து நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எவ்வளவு நஷ்ட ஈடு என்பது குறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஆனால், ஈராஸ் நிறுவனம் தங்களால் இழப்பீடு தொகையை பகிர முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் 'லிங்கா' தயாரிப்பாளர்களுக்கும் இடையே கணக்கு வழக்குகள் சரிபார்த்த திருப்பூர் சுப்பிரமணியம் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இறங்கினார்கள்.

ரஜினி, ராக்லைன் வெங்கடேஷ், திருப்பூர் சுப்பிரமணியம் மூவருமே தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். தன்னால் மட்டுமே இழப்பீடு முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தயாரிப்பாளர் தெரிவித்துவிட்டதால், ரஜினி தற்போது ஈராஸ் நிறுவனத்திடம் பேசி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து விநியோகஸ்தர்களுக்கு தொடர்ச்சியாக பணம் தரும்படி நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இதனால் விநியோகஸ்தர்கள் சென்னையில் இன்று மதியம் கூடி விவாதிக்க இருக்கிறார்கள்.

இக்கூட்டத்தில் 'லிங்கா' இழப்பீடு விவகாரத்தில் விநியோகஸ்தர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.

SCROLL FOR NEXT