‘‘100 படங்களை அடுத்தடுத்து பண்ண வேண்டும் என்று விரும்ப வில்லை. ஆனால் 10 சூப்பர் படங் களை பண்ண வேண்டுமென்று விரும்புகிறேன் என்று இயக்குநர் ஷங்கர் சார் சொல்வார். இப்போதெல்லாம் அந்த வார்த்தைகள்தான் என் கண்முன் விரிகிறது. ‘வல்லினம்’ ஒரு நல்ல நடிகர் என்கிற பேரை எனக்கு பெற்றுக் கொடுத்தது.
அந்த நற்பெயரை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் விதமாக படங்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கிறேன்” என்று நிதானமாக பேசுகிறார், நகுல். ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’, ‘அமிலி துமிலி’, ‘நாரதர்’ என்று அடுத்தடுத்து பல படங்களில் நாயகனாக நடித்துவரும் அவரைச் சந்தித்தோம்.
தொடர்ச்சியாக புதிய இயக்குநர்களின் படங் களில் மட்டுமே நடித்து வருகிறீர்களே?
புதிய இயக்குநர்களுடன் நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது? மேலும் புது இயக்குநர்கள் என்னை அணுகி கதை சொல்வதும், அதில் எனக்குப் பிடித்த கதையில் நான் நடிப்பதும் இயல்பாக அமைவதுதான். புதிதாக வரும் திறமைசாலிகளுடன் இணையும்போது நம்முடைய திறமையும் நன்றாக வெளிவரும் என்பது என் நம்பிக்கை.
அத்துடன் யாரையும் புதியவர்கள் என்று உதாசீனப்படுத்தி விடக் கூடாது. இன்றைய புதிய இயக்குநர்கள், நாளைய வெற்றிகரமான முன்னணி இயக்குநராகவும் மாறலாம். நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் என்று இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம்.
‘வல்லினம்’ முடித்த கையோடு அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கத் தொடங்கினீர் களே?
ஆமாம். ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’, ‘அமிலி துமிலி’, ‘நாரதர்’ ஆகிய படங்களில் நடிக்கத் தொடங்கினேன். இதில் ‘அமிலி துமிலி’படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்து வருகிறது. மேலும் இரண்டு படங்களில் நடிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஆக்ஷன் கதைகளின் மீது நீங்கள் தனிக் கவனம் செலுத்துவது போல் தெரிகிறதே?
நான் கடைசியாக நடித்த படங்கள் ஆக்ஷன் படங்களாக இருந்ததால் இப்படி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. எனக்கு காதல், காமெடி படங்களில் நடிக்கவும் பிடிக்கும். அதேபோல் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் வில்லனாக நடிக்கவும் தயார்.
பாடகர் நகுலை இப்போது அதிகம் பார்க்க முடியவில்லையே?
பாடுவதை நான் என் முக்கிய தொழிலாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் நடிக்கும் படங்களின் இசையமைப்பாளர் விரும்பினால் மட்டும் பாடி வருகிறேன். மற்றபடி நடிப்பில்தான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்.
உங்கள் அக்கா தேவயானி மீண்டும் சினிமா வில் நடிக்க வருகிறாரே?
நான் நடிக்கத் தொடங்கி இதுவரையிலும், ‘டேய் நகுல் என்ன படம் பண்ற. கதையை என் கிட்ட அனுப்பு’ என்று ஒரு தடவைகூட அக்கா சொன்னதில்லை. ‘இது உன்னுடைய வாழ்க்கை. கடின உழைப்பை கொடுத்து நீதான் இதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று மட்டும்தான் கூறுவார். அதேபோலத்தான் நானும் அவர் விஷயங்களில் அதிகம் தலையிடுவதில்லை.
அவரது திட்டமிடல் எப்போதுமே சரியாகத்தான் இருக்கும். சினிமா, சின்னத்திரை சமீபத்தில் ஆசிரியை பணியைக்கூட அவர் தேர்வு செய்தார். ஒவ்வொரு கட்டத்திலும் இதுபற்றி அவரேதான் முடிவெடுத்தார். இப்போதும் அப்படித்தான்.
அவர் கடினமான உழைப்பாளி. அவர் எடுக்கும் முடிவுகள் சரியாகத்தான் இருக்கும். எல்லாவற்றிலுமே அக்கா எனக்கு தோழியைப் போன்றவர். நான் அவரின் தம்பியாக இருப்பதை பெருமையான விஷயமாகத்தான் நினைக்கிறேன்.
திருமணம் எப்போது?
நடிப்புக்காக என்னை ஒரு இயக்குநரிடமிருந்து மற்றொரு இயக்குநர் வசம் ஒப்படைக்கும் காலகட்டத்தில் இருக்கிறேன். திருமணம் பற்றி அவ்வப்போது வீட்டில் பேசுவார்கள். என் திருமணம் காதல் திருமணமாக இருக்காது. நிச்சயம் வீட்டில் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன். அதிகபட்சம் 2 ஆண்டுகளுக்குள் என் திருமணம் நடக்கும்.