தமிழ் சினிமா

எங்கள் படக்குழுவே ஆஸ்கர் வென்றதைப் போல உள்ளது: க்ரெய்க் மேன் குறித்து கமல்ஹாசன்

ஐஏஎன்எஸ்

'உத்தம வில்லன்' படத்தில் பணியாற்றிவருபவரும், 'விப்ளாஷ்' திரைப்படத்திற்காக இந்த ஆண்டு ஆஸ்கர் வென்றவருமான கனடாவைச் சேர்ந்த ஒலிக்கலவை நிபுணர் க்ரெய்க் மேன் குறித்து நடிகர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

"'உத்தம வில்லன்' திரைப்படத்திற்காக மிகச் சிறந்த முறையில் ஒலிக் கலவை அமைக்கவேண்டும் என்று எனது நண்பர் , ஒலிக் கலவை நிபுணர் குணாலைக் கேட்ட போது, க்ரெய்க் மேன் என்பவரைப் பரிந்துரைத்தார். ஆஸ்கரும் இதே பெயரைத் தேர்வு செய்ததில் மகிழ்ச்சியே.

நாங்கள் 'விப்ளாஷ்' படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒலிக்கலவையில் 'பேர்ட் மேன்' திரைப்படம் சிறப்பாக உள்ளது என்று கூறும் பணிவு அவரிடத்தில் இருந்தது.

அவரது பெருந்தன்மையும், உத்தம வில்லனில் பணியாற்றும் போது அவர் காட்டிய பொறுமையும் எனக்குப் பிடித்திருந்தது. 'விப்ளாஷ்' படத்தோடு எங்களுக்கு சம்மந்தம் இல்லை என்றாலும், எங்கள் படக்குழுவே ஆஸ்கர் வென்றதைப் போல இருந்தது. அந்தக் குழுவில் ஒருவராகவே எங்களையும் உணர்ந்தோம். க்ரெய்க் இந்த கௌரவத்தைப் பெறுவதில் பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தன்னுடன் இணைந்து, 'விஸ்வரூபம்' 1 மற்றும் 2, 'உத்தம வில்லன்' ஆகிய படங்களில் பங்காற்றியுள்ள ஒலிக் கலவை நிபுணர் குணால் ராஜன் குறித்து பேசுகையில், "க்ரெய்கை எனக்கு அறிமுகம் செய்ததற்காக குணாலுக்கு நன்றி. உங்கள் கை ராசி நன்றாக உள்ளதென்று நினைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கு ஆஸ்கர் கிடைத்துள்ளது. 'உத்தம வில்லன்' படத்தின் ஒலிக் கலவையை நான் கேட்டேன், சர்வதேச படங்களுக்கு நிகரான உழைப்பையே இந்தப் படத்திற்கும் க்ரெய்க் தந்துள்ளார்”

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். க்ரெய்க் மேனுடன் மீண்டும் பணியாற்றவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ரமேஷ் அர்விந்த் இயக்கியுள்ள 'உத்தம வில்லன்' ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. கமல் ஹாசனுடன் இணைந்து பூஜா குமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, கே. பாலச்சந்தர், கே. விஸ்வநாத், ஜெயராம் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT