விஜய் நடிக்கும் 'புலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என படக்குழு தெரிவித்தது.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட ஏராளமான நடசத்திரங்கள் நடித்து வரும் படம் 'புலி'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தமீன் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி வெளியாக இருக்கிறது என்றும், அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என தகவல்கள் வெளியாகின.
எப்போது வெளியாகும் என்று படக்குழுவிடம் விசாரித்ததில், "இன்னும் ஃபர்ஸ்ட் லுக் எந்தொரு விஷயத்தை நாங்கள் முடிவு செய்யவில்லை. அதற்குள் எப்படி இந்த மாதிரியான செய்திகள் வெளியாகிறது என்று தெரியவில்லை.
படப்பிடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் மற்றும் விஜய் என அனைவருமே மும்முரமாக இருக்கிறார்கள். இன்னும் 65 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது.
புலி படத்தில் நிறைய நடிகர்கள் இருப்பதால் எந்த மாதிரி ஃபர்ஸ்ட் லுக் பண்ணலாம் என்று கூட விவாதிக்கவில்லை.
படப்பிடிப்பை முதலில் முடிக்கலாம் என்பதிலே எங்களது முழுக்கவனமும் தற்போது இருக்கிறது. படத்துக்கான இறுதி கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு துவங்கும் முன்பே, படம் எப்படி வர வேண்டும் என்பதில் இயக்குநர் சிம்புதேவன் தெளிவாக சொல்லிவிட்டதால் இறுதிகட்டப் பணிகளில் எந்த ஒரு தொய்வும் இல்லை.
இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான தயாரிப்பு படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் என்பதும் பிரம்மாண்டமாகதான் இருக்கும். அனைத்தும் முடிவான உடன் முறைப்படி அறிவிக்கிறோம்" என்று தெரிவித்தார்கள்.