சாலையோரம்
இயக்குநர் பி.வாசுவிடம் உதவியாளராக இருந்த மூர்த்தி கண்ணனின் இயக்கத்தில் உருவாகி வரும் படம், ‘சாலையோரம்’. தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் கவனிக்கப்படாத துப்புரவு தொழிலாளிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தை இயக்கிவருவதாக கூறுகிறார் இயக்குநர் மூர்த்தி கண்ணன்.
ஒரு துப்புரவு தொழிலாளிக்கும் டாக்டரின் மகளுக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்தக் காதலின் முடிவு என்ன என்பதுதான் படம். இப்படத்தைப் பற்றி மேலும் கூறும் மூர்த்தி கண்ணன், “அம்பத்தூர் அருகில் அத்துப்பட்டு எனும் இடத்தில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் படத்தின் 3 நாள் படப்பிடிப்பு நடந்தது. மொத்த படக்குழுவும் முன்னேற்பாடாக மாத்திரை எல்லாம் போட்டுவிட்டுத்தான் படப்பிடிப்புக்கு சென்றோம். படப்பிடிப்பு நடந்த 3 நாட்களும் சாப்பிடவே முடியவில்லை அவ்வளவு நாற்றம். குமட்டல் வேறு வந்தது. ஆனால் அத்தனை கஷ்டத்தையும் தாண்டி படப்பிடிப்பை முடித்தோம். படத்தின் ஒரு காட்சிக்காக அங்கிருந்த குப்பை மலையில் ஏறி சிங்கம்புலி நடித்துக் கொடுத்தார்” என்றார்.
சார்லஸ் ஷாபிக் கார்த்திகா (csk)
ஐபிஎல் போட்டிகளில் CSK அணி கலக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் csk (சார்லஸ் ஷாபிக் கார்த்திகா) என்ற பெயரில் படம் ஒன்று வேகமாகத் தயாராகி வருகிறது. பிரகாஷ்ராஜின் டூயட் பாசறையில் பயின்ற மாணவர்கள் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குநரான சத்தியமூர்த்தியிடம் பேசுகையில், “இந்த படத்தின் மிக முக்கிய பிளஸ் பாயிண்டாக வசனங்கள் இருக்கும் என்று நம்புகிறேன். படத்தின் நாயகியான ஜெய் குஹேணி பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டும். படத்திற்காக ஜெய் குஹேணியின் கைகளைக் கட்டி 300 லிட்டர் கொள்ளவு உள்ள மிகப் பெரிய தொட்டியில் முக்கி எடுக்கும் காட்சியை படமாக்கினோம். அதிக டேக் வாங்கி இரண்டு நாட்கள் இந்த காட்சியை எடுத்தபோதும் எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் இந்தக் காட்சியில் அவர் நடித்துக்கொடுத்தார். அவரைப் போலவே மற்ற கலைஞர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தனர்” என்றார்.
முருகாற்றுபடை
‘சேது’, ‘அமர்க்களம்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகி யாக பணியாற்றிய முருகானந்தம் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘முருகாற்றுபடை’. அவரே எழுதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நடந்து வருகிறது.
“1989ல் நான் நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தேன். ஆனால் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. படப்பிடிப்பு தளங்களில் தயாரிப்பு நிர்வாகிக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்து நானும் ஒரு தயாரிப்பு நிர்வாகியாக மாறினேன். இதுவரை சுமார் 44 படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி உள்ளேன். இந்தப் படத்தில் ஹீரோ வின் பெயர் முருகன். அவனும் அவனது நண்பர்களும் படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு விஷயத்தினை முடிக்கிறார்கள். அதை எந்த ரஅளவிற்கு சுவாரசியமாக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சுவாரஸ்யமாகச் சொல்லி யிருக்கிறோம். படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்கிறார் முருகானந்தம்.
கன்னக்கோல்
தமிழ் திரையுலகில் உண்மைக் கதைகள் எப்போதுமே வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது ‘கன்னக்கோல்’ என்ற பெயரில் ஒரு உண்மைக் கதையை இயக்கிவருகிறார் குமரேசன்.
இப்படம் குறித்து நம்மிடம் பேசிய குமரேசன் “பரணி, கஞ்சாகருப்பு, தீப்பெட்டி கணேசன், பூவை சுரேஷ் ஆகிய நால்வரும் திருடர்கள்.. அந்த ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரும் திருடர்களாக வாழ்ந்து திருந்தியவர்கள்.
இந்த நால்வர் மட்டுமே திருந்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் திருந்தினார்களா இல்லையா என்பதுதான் கதை. உண்மைக் கதையான இதை நகைச்சுவையாக சொல்லியுள்ளோம். பாண்டிச்சேரி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் படப்பிடிப்பை முடித்து இப்போது இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.