‘லிங்கா’ படத்தினால் ஏற்பட்ட இழப்பு தொடர்பான பிரச்சினையில் ரஜினிகாந்த் தலையிடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.
ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘லிங்கா’. இப் படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறும் விநியோகஸ்தர்கள், அந்த நஷ்டத்தை ஈடுசெய்யக்கோரி சென்னையில் கடந்த 10-ம் தேதி உண்ணாவிரதம் இருந்தனர். இதைத் தொடர்ந்து அன்று மாலை ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பா ளர் ராக்லைன் வெங்கடேஷ் நிருபர் களை சந்தித்து பேசினார். அப்போது அவர் படத்தின் வசூல் பாதித்ததற்கு விநியோகஸ்தர்கள்தான் காரணம் என்று கூறினார்.
இந்நிலையில் விநியோகஸ் தர்கள் மன்னன், சிங்காரவேலன், சதீஷ்குமார், ரூபன் ஆகியோர் கூட்டாக நேற்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
‘லிங்கா’ படத்தால் ஏற்பட்ட இழப்பால் விநியோகஸ்தர்கள் மிகுந்த வேதனை அடைந்திருக்கி றோம். இந்த நேரத்தில் நாங்கள் மன்னிப்பு கேட்கத் தயாரா என்று தயாரிப்பாளர் கேட்கிறார். இப்பிரச்சினையில் ரஜினிகாந்த் தலையிட்டால் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்.
இடைத் தரகர்களிடமெல்லாம் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. படத்தை திரை யிட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வது தொடர்பாக எங்களுக்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்க வில்லை. இதனால் விநியோகஸ்தர்களாகிய நாங்கள் அடுத்தகட்ட போராட்டத்துக்கு செல்லத் திட்ட மிட்டிருக்கிறோம். இது தொடர்பாக ரஜினிகாந்த் நேரில் அழைத்து பேசாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம்.