மலையாள நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் (76) கோவையில் உள்ள மருத்துவமனையில் நேற்று காலமானார்.
சுவாசக் கோளாறு மற்றும் கால் வீக்கத்துடன் கோவை அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் கடந்த 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதும் மாரடைப்பு, சிறுநீரகம் பழுது, பல்வேறு உறுப்பு கள் செயலிழப்பு காரணமாக நேற்று காலை மருத்துவமனையில் இறந்ததாக மருத்துவமனையின் இதய சிகிச்சை தலைமை மருத்துவர் அலெக்ஸாண்டர் தாமஸ் தெரிவித்தார்.
மாலா அரவிந்தன் 500 க்கும் அதிகமான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். பல்வேறு குணச்சித்திர வேடங் களிலும் நடித்தவர். கடைசியாக ‘லால் பகதூர் சாஸ்திரி’ என்ற படத்தில் நடித்தார். சிறந்த தபலா கலைஞரும் ஆவார்.
1969-ம் ஆண்டு சிந்தூரம் என்ற சிறிய வேடத்தில் அறிமுகம் ஆன இவர், என்டே கிராமம், தறவாடு, அதிகாரம், பூதக் கண்ணாடி, கொய்யாயம் குஞ்சச்சன், ஜோக்கர், மீச மாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அவரது உடல், கேரள மாநிலம் திருச்சூருக்கு நேற்று காலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.