'லிங்கா' இழப்பீடு தொடர்பாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ஈராஸ் நிறுவனத்துடம் பேச்சுவார்த்தை நடத்த மும்பை சென்றிருக்கிறார்.
'லிங்கா' தயாரிப்பாளர் தரப்பில் இருந்து நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எவ்வளவு நஷ்ட ஈடு என்று நேற்று (ஜனவரி 28) முடிவு செய்வதாக இருந்தார்.
ஆனால், 'லிங்கா' இழப்பு கணக்கு வழக்குகளை பார்த்த தயாரிப்பாளர் "இவ்வளவு நஷ்டமா... என்னால் மட்டுமே இதனை ஈடுகட்ட முடியாது" என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதேவேளையில், "இப்படத்தை என்னிடம் வாங்கிய ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள ஈராஸ் நிறுவனத்திற்கு சென்றிருக்கிறார்.
ஈராஸ் தரப்பில் இருந்து எவ்வளவு நஷ்டஈடு மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எவ்வளவு என்ற பேச்சுவார்த்தை இருதரப்பினரும் ஈடுபட இருக்கிறார்கள். கார்ப்பரெட் நிறுவனம் என்பதால் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இன்று அல்லது நாளை இப்பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் யாருக்கு எவ்வளவு நஷ்ட ஈடு என்பதை முடிவு செய்கிறார்.
முன்னதாக, இதுவரை வெளிவந்த ரஜினி படங்களில் அதிகமான நஷ்டத்தை 'லிங்கா' சந்தித்து இருக்கிறது என்கிறது விநியோகஸ்தர்கள் வட்டாரம். 'பாபா' ரஜினியே தயாரித்த படம் என்பதால் முழுமையாக திருப்பி கொடுத்தார். 'குசேலன்' நஷ்டத்தில் 25% திருப்பி கொடுக்கப்பட்டது.
'லிங்கா' பொறுத்தவரை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தனக்கொரு லாபத்தை வைத்து ஈராஸ் நிறுவனத்திற்கு முழு உரிமையையும் கொடுத்துவிட்டார். ஈராஸ் நிறுவனம் தமிழக உரிமையை கோயம்புத்தூர் நீங்கலாக வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு கொடுத்தது. வேந்தர் மூவிஸ் நிறுவனம் ஒரு சில இடங்களில் தாங்களே வெளியிட்டும், மற்ற இடங்களை இதர விநியோகஸ்தர்களுக்கும் கொடுத்தது.
விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்களிடம் குறைந்தபட்ச உத்தரவாத தொகையை வாங்கி கொண்டு படத்தை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், குறைந்தபட்ச உத்திரவாத தொகையை பல இடங்களில் 'லிங்கா' வசூல் செய்யவில்லை. அதுமட்டுமன்றி, விநியோகஸ்தர்களுக்கு தரப்பிலும் எதிர்பாராத நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.