அஜித் நடித்துள்ள 'என்னை அறிந்தால்' படத்தின் சென்சார் இம்மாதம் 21-ம் தேதி நடைபெறும் என்றும், 29-ம் தேதி படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஏ.ஏம்.ரத்னம் அறிவித்திருக்கிறார்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'என்னை அறிந்தால்'. ஹாரிஸ் ஜெயரான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.
பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம், இறுதிகட்டப் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தால் ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் அறிவித்தார்.
இந்நிலையில், படத்தின் இறுதிகட்டப் பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து 21-ம் தேதி படம் சென்சாருக்கு அனுப்பப்படும் என்றும், 29-ம் தேதி படம் வெளியாகும் என்று ஏ.எம்.ரத்னம் அறிவித்திருக்கிறார்.
மேலும், இப்படத்தின் உரிமைகளை கைப்பற்றுவதற்கும் விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இப்படத்தின் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், சில வாரங்கள் ஒய்விற்கு பிறகு மீண்டும் 'வீரம்' சிவா இயக்கும் படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் அஜித்.