ரசிகர்கள் காட்டும் அன்பிற்கு நன்றி என்பது மிக சிறிய வார்த்தை என்று 'கத்தி' பட வெற்றி குறித்து நடிகர் விஜய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கத்தி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்ச ஆதரவு பெற்றது லைக்கா நிறுவனம் என்று பல்வேறு பிரச்சினைகளை பின் இப்படம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது.
ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்று, நேற்று 100-வது நாளை கடந்திருக்கிறது. இதற்கு படக்குழுவினர் சமூகவலைத்தளத்தில் நன்றி தெரிவித்தார்கள். ஆனால் விஜய் தரப்பில் எதுவுமே தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், " 'கத்தி' படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக மாற்றியதற்கு நன்றி. நீங்கள் என்னிடம் காட்டும் அன்புக்கு நான் கூறும் 'நன்றி' என்ற வார்த்தை மிக சிறியதுதான். நான் இத்தனை வருடங்களில் சேர்ந்த மிகப் பெரிய சொத்து நீங்களும், நீங்கள் தரும் அன்பும்தான்" என்று விஜய் தன் ரசிகர்களோடு கலந்துரையாடும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.