தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'காக்கி சட்டை' பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
'எதிர்நீச்சல்' படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அப்படக்குழுவே மீண்டும் இணைந்த படம் 'காக்கி சட்டை'. தனுஷ் தயாரித்த இப்படத்தில் ப்ரியா ஆனந்திற்கு பதிலாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியீடு என்று திட்டமிடப்பட்டு பின்வாங்கியது. 'காக்கி சட்டை' படத்தின் தமிழ்நாட்டு உரிமையை வாங்கியிருந்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்பான 'கயல்' வெளியானதே இதற்கு காரணமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து பொங்கல் வெளியீடு என்று விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் பின்வாங்கியது. தொடர்ச்சியாக பிப்ரவரி வெளியீடு என்று விளம்பரப்படுத்தி வந்தார்கள்.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், 'காக்கி சட்டை' பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகளும் 'U' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.