சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படத்தினைத் தொடர்ந்து இயக்குநர் சிம்புதேவன், விஜய் நடிக்கவிருக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தினை தமீன் பிலிம்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.
இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
’இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தின் மூலம் ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க ஆரம்பித்த உடன், தமிழ் திரையுலகில் இருந்து பல்வேறு முன்னணி இயக்குநர்கள் அவர்களது படங்களில் நடிக்க அவரை அணுகினார்கள். ஆனால், ஸ்ரீதேவி எதிலும் நடிக்கவில்லை.
தற்போது சிம்புதேவன் சொன்ன கதையை கேட்டவர், விஜய் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'கத்தி' படத்தில் நடித்து வரும் விஜய், அதனைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.