இயக்குநர்கள் ஷங்கர், கவுதம் மேனன் படங்களுக்கு இசையமைக்க, இளம் இசையமைப்பாளர் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ் நடிக்கும் மற்றும் தயாரிக்கும் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்தார் இளம் இசையமைப்பாளர் அனிருத். அவரது பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு வெளி வாய்ப்புகள் கிடைத்தன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' படத்திற்கு ஒப்பந்தமானபோது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். விஜய் படத்திற்கு அனிருத் இசையா என்றார்கள். தொடர்ச்சியாக ஹிட் பாடல்களைக் கொடுத்து வரும் அனிருத், பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் பாடியும் வருகிறார்.
'ஐ' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனிருத் பாடிய "மெர்சலாயிட்டேன்" பாடலுக்கு வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், ஷங்கர், கெளதம் வாசுதேவ் மேனன் இருவருமே அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதுவரை ஷங்கர் இயக்கிய படங்களில் 'அந்நியன்' 'நண்பன்' தவிர மற்ற படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் வாசுதேவ் மேனன் என பெரிய இயக்குநர்களின் படங்களுக்கு இளம் வயதிலேயே இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததால் அதிக சந்தோஷத்தில் திளைக்கிறார் அனிருத்.