‘சென்னை 28’ முதல் ‘வணக்கம் சென்னை’ வரை துறுதுறு நாயகனாக திரையில் முகம் காட்டியவர் சிவா. 11 மாத இடைவெளிக்குப்பின், மணிகண்டனின் இயக்கத்தில் ‘144’ என்ற புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவரைச் சந்தித்தோம்.
‘வணக்கம் சென்னை’ படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் பிடித்த வேலையைச் செய்ய சில மாதங்கள் செலவழிப்போமே என்ற எண்ணத்தில் அந்த படங்களை நான் ஒப்புக்கொள்ளவில்லை. பிடித்த வேலை என்றதும் விஞ்ஞானி, மருத்துவர் என்று நீங்களாகவே வேலையைக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.
திரைப்படம் இயக்குவதுதான் அந்த வேலை. அதற்காக இரண்டு கதைகளை எழுதி முடித்திருக்கிறேன்’’ என்று கலகலப்பாக பேசத் தொடங்குகிறார் சிவா.
திடீரென்று இயக்கத்தின் மீது ஆர்வம் வர காரணம் என்ன?
என் திருப்திக்காகத்தான் இந்த விஷ யத்தை தொடுகிறேன். சின்ன வயதில், ஒவ்வொரு விஷயத்தை கவனிக்கும்போதும் இதை யார் கண்டுபிடித்திருப்பார் என்று யோசிக்கத் தோன்றும். ஊர் ஊராக சென்று பொம்மைகளை வைத்து கதை சொல்பவரும் ஒருவிதத்தில் இயக்குநர்தான்.
இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது இயக்கம் என்பது ஒரு கருவியைப்போலத்தான். அதை சரியாக நகர்த்திக்கொண்டு போக கேமரா, எடிட்டிங் இதுபோன்ற கருவிகள் தேவைப் படுகிறது. இயக்குநராகும் ஆசை வந்ததும் பேனா, பேப்பர்களோடு கிளம்பிவிட்டேன். கதையாக்கத்தின் இறுதிகட்ட வேலைக்காக கடந்த மாதம் முழுக்க அமெரிக்காவில் தங்கியிருந்தேன்.
ஒரு கதைக்கு பெயரும் வைத்துவிட்டேன். ‘காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு’. என் இயக்கத்தில் தொடங் கும் படங்களை நானே தயாரிக்க வேண்டும் என்கிற ஆசையும் எழுந்துள்ளது. அதற்கான வேலைகளை தொடர்ந்து செய்யப்போகிறேன்.
நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் ‘144’ படத்தின் கதை என்ன?
இந்தப்படத்தை சி.வி.குமார், தன் தயாரிப் பில், அவருடைய நண்பர் மணிகண்டனை வைத்து இயக்குகிறார். மதுரையைக் களமாகக் கொண்ட படம் இது. காமெடி நிறைந்த காதல் கதைதான். சொல்லப்போகும் விதமும் புதிதாக இருக்கும். பொங்கல் முடிந்து படப்பிடிப்புக்கு புறப்படுகிறோம்.
‘கலகலப்பு 2’ தயாராகிறதாமே?
அதற்கான திட்டம் இருப்பதாக இயக்குநர் சுந்தர்.சி கூறியிருந்தார். அனுபவம் மிக்க இயக்குநர் அவர். என்னை மாதிரி நடிகர்களை உள்வாங்கிக்கொண்டு அவர் எழுதுகிற கதைப்போக்கே வித்தியாசமாக இருக்கும். அந்தப் படத்தின் அடுத்த பாகம் வந்தால் இன்னும் கலகலப்பாக இருக்கும்.
நகைச்சுவைப் படங்கள் மட்டும்தான் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
நான் அப்படி நினைக்கவில்லை. என் னிடம் கதை சொல்ல வருபவர்கள் அந்த மனநிலையோடு வருகிறார்கள். தயாரிப்பாளர் களே, ‘தமிழ்ப்படம்’, ‘தில்லுமுல்லு’, ‘கலகலப்பு’ மாதிரி ஒரு கதை என்றுதான் சந்திக்கவே வருகிறார்கள். எனக்குப்பிடித்த படங்களை நான்தான் இயக்கப்போகிறேன். அதில் காமெடியை அளவாக வைத்துவிட்டு 100 சதவீதம் மிரட்டலாக வடிவமைப்பேன். நான் எழுதி முடித்திருக்கும் கதைகளில் ஒன்று குடும்ப பின்னணியைக் கொண்ட கதை. அதில் எஸ்.பி.பி போன்ற ஒருவர்தான் நாயகன்.
‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்துக்கு பிறகு வசனம் எழுதுவதில் கவனம் செலுத்தினீர்களா?
நண்பர்கள் வந்து கேட்டால் ‘இல்லை’ என்று மறுக்கும் குணத்தை கடவுள் எனக்கு கொடுக்கவில்லை. அந்த அன்பால் செய்யும் வேலைதான் இந்த வசனம் எழுதுகிற வேலை.
இப்போதும் ஆர்.ஜே பணியைத் தொடர்ந்து செய்கிறீர்களா?
ஞாயிற்றுக்கிழமை மட்டும். மிர்ச்சி எஃப்.எமில் ‘சிவ..சிவா’ என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன். கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்தபோதுகூட அங்கிருந்து பதிவு செய்து இங்கு அனுப்பி வைத்தேன். கடவுளிடம் நான் கேட்கிற ஒரே விஷயம் நம்மால் நாலு பேர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான். அதுதான் என் லட்சியம்.
வெங்கட்பிரபு, ஜெய், பிரேம்ஜி என்று உங்கள் நண்பர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்?
எல்லோருமே ஒவ்வொரு வேலையில் பரபரப்பாக இருக்கிறோம். வெங்கட்தான் இடையில் கூட ‘சென்னை 28’ நண்பர்கள் கூடி மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார். இந்த ஆண்டின் இறுதிக்குள் அது சாத்தியமானால் மகிழ்ச்சி.
உங்க மனைவி பிரியா பாட்மிண்டன் விளையாட்டைத் தொடர்கிறாரா?
தேசிய அளவிலான போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இடையில் நான் ஒரு போட்டியில் அவருக்கு எதிராக விளையாடினேன். ஒரு புள்ளிகூட எடுக்கவில்லை. ‘உன் மீது கொண்ட காதலால்தான் தோற்றுப் போனேன்’ என்று சொன்னேன். அப்படியே நம்பிவிட்டார்.
அஜித் உங்களுக்கு நெருக்கமானவர் என்கிறார்களே?
சினிமா பற்றி அவரிடம் பேசுவது குறைவு. எல்லோருக்கும் அவரை பிடிக்க முக்கியமான காரணம் அவர் மற்றவர்கள் மீது காட்டும் எதார்த்தமான அன்புதான். கதவை திறந்து உள்ளே செல்லும்போதுகூட நாம உள்ளே வரும் வரை, அந்த கதவை திறந்தபடியே பிடித்திருப்பார். இது அவருக்கு அவசியமில்லை. இந்த இடத்தில் நடிக்க வேண்டும் என்பதும் அவருக்கு அவசியமில்லை. அதுதான் அஜித்.