தமிழ் சினிமா

சேரனின் ‘சினிமா டூ ஹோம்’ திட்டம் பிப்.15-ம் தேதி சென்னையில் தொடக்க விழா

செய்திப்பிரிவு

சினிமா டூ ஹோம் (சிடூஎச்) திட்டத்தை பிப்.15 ம் தேதி திரைப்படத்துறையினர் கலந்து கொள்ளும் விழாவாக நடத்தப் போவதாக இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தை இயக்கி, படத்தை ‘சிடூஎச்’ திட்டத்தின் மூலம் முதல் வெளியீட்டு படமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார், சேரன்.

இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று சேரன் அறிவித்தார்.

மேலும், திரைப்படத் துறையின் ஒட்டு மொத்த ஆதரவைப் பெற்று ‘சிடூஎச்’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளார். இது குறித்து சேரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

சினிமா டூ ஹோம் திட்டத்திற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரி வித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக படங்களை திரையிட முடியாத தயாரிப்பாளர்கள் எங்களுடன் சேர்த்து படத்தை ரிலீஸ் செய்யவும் தயாராகி வருகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சினிமா டூ ஹோம் திட்டத்தின் முதல் வெளியீட்டை சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடத்தலாம் என்றும், இதில் தமிழ்த் திரைப்படத் துறையைச் சார்ந்த முக்கிய பிரபலங்களை கலந்து கொள்ளச் செய்யலாம் என்றும் கூறியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவு கிடைக்கும்போது சினிமா டூ ஹோம் திட்டத்தில் பல பெரிய படங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. அதனால் இந்த திட்டத்தில் பணியாற்றும் விநியோகஸ்தர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.

எனவே, தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைப்படி திட்டத்தை பதினைந்து நாட்கள் தள்ளி வைத்திருக்கிறோம். வருகிற 15-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திரைத்துறையினர் கலந்து கொள்ளும் பெரிய விழாவாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

இவ்வாறு சேரன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT