தமிழ் சினிமா

ஆம்பள வெற்றி படக்குழு கூட்டத்தில் விஷால், சுந்தர்.சி உருக்கம்

செய்திப்பிரிவு

இனிமேல் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கு நண்பர்களை அழைக்கப் போவதில்லை என்று விஷால் கூறியுள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, பிரபு, சதீஷ், வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஆம்பள'. இப்படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

இச்சந்திப்பில் விஷால் பேசும்போது, "2012 பொங்கல் வெளியீடாக வந்திருக்க வேண்டிய படம் 'மதகஜராஜா'. அப்படம் இன்னும் வெளியாகவில்லை என்ற கோபம் எனக்குள் இருந்தது. ஆகையால் மீண்டும் சுந்தர்.சி உடன் இணையும் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அந்தப் படம் வராதது ஒரு நடிகரா எனக்கு மிகப்பெரிய வருத்தம். இனி மேலாவது இந்த வெற்றியைப் பார்த்து அந்த படத்தோட தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டார்னா பரவாயில்லை என்று நினைக்கிறேன். இப்போது மட்டுமல்ல, இன்னும் பத்து வருடங்கள் கழித்து வெளிவந்தாலும் ‘மதகஜராஜா’ வெற்றிப் படமாக அமையும் என்பதி சந்தேகமில்லை.

பொங்கல் வெளியீடு என்று முடிவு செய்தவுடன், வேறு என்ன படங்கள் வெளியாகின்றன என்பது எனக்கு தெரியாது. 'ஆம்பள' இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா "நான் எவனா இருந்தாலும் வெட்டுவேன்" என்று சொன்னதாக பேசினார். அவ்வாறு நான் கூறவில்லை. அது அவருடைய கற்பனைப் பேச்சு.

'நான் சிகப்பு மனிதன்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷ்ணு கூட "எனக்கு லட்சுமி மேனனுக்கும் காதல்" என்று பேசினார். இனிமேல் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா வைக்கக் கூடாது என்று முடிவு பண்ணியிருக்கிறேன். அவ்வாறு வைத்தாலும் நண்பர்களைக் கூப்பிடக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்" என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய சுந்தர். சி, "80-களில் வெளியான கமர்சியல் படங்களைப் போலதான் ஆம்பள படம் இருக்கும் என்று சொல்லித் தொடங்கினோம். அது அப்படித்தான் தயாரானது. அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஒரு வருத்தம் உள்ளது. மெட்ராஸில் இருக்கும் இரண்டு மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளின் வசூலை வைத்து தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலைக் கணிப்பது நியாயமானதாகத் தெரியவில்லை. மொத்த வியாபாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இந்த வருடத்தின் இறுதியில், உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பாணியில் விஷாலோடு ஒரு படத்தைத் துவங்கவுள்ளேன். அது இன்னும் பிரம்மாண்டமாக, பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு தயாராகும். ஆம்பள படத்தின் வெற்றி, அந்தப் படத்தை இயக்கும் தைரியத்தைத் தந்துள்ளது. மேலும் ஹிப் ஹாப் தமிழன் ஆதி, எனது பேனரில் தயாராகும் படத்துக்கு இசையமைத்து, நாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார்" என்றார்

SCROLL FOR NEXT