விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் 'சகாப்தம்' படத்தின் இசை வெளியீடு ஜனவரி 31ம் தேதி நடைபெறுகிறது. 'சகாப்தம்' திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ல் ரிலீஸ் ஆகிறது.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கும் 'சகாப்தம்' திரைப்படத்தின் மூலம் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். நேஹா, சுப்ரா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
ரஞ்சித், தேவயானி, போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
சுரேந்தர் இயக்கும் இப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இவரது இசையில் சிம்பு, ரம்யா நம்பீசன், ஆண்ட்ரியா பாடிய 'அடியே ரதியே' என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
லகரி ஆடியோ நிறுவனம் 'சகாப்தம்' படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது. வரும் ஜனவரி 31ம் தேதி 'சகாப்தம்' படத்தின் இசை வெளியிடப்பட உள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ல் 'சகாப்தம்' படம் ரிலீஸ் ஆகிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அனேகன்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.