மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த 'பெங்களூர் டேஸ்' திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
பஹத் பாசில், நஸ்ரியா நஸீம், துல்கர் சல்மான், நிவின் பவுலி, பார்வதி, இஷா தல்வார், நித்யா மேனன் என மலையாள திரையுலகைக் கலக்கும் இளமைப் பட்டாளம் அனைவரும் 'பெங்களூர் டேஸ்' படத்தில் நடித்தனர்.
அஞ்சலி மேனன் இயக்கிய இப்படம் தனி கவனம் பெற்றதோடு, வர்த்தகத்துட்ன விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது. 9 கோடியில் தயாரிக்கப்பட்ட 'பெங்களூர் டேஸ்' ரூ.50 கோடி வசூலை அள்ளியது.
பெங்களூரில் செட்டில் ஆக வேண்டும் என்பது கனவு காணும் மூன்று நண்பர்கள் கதைதான் படத்தின் மையக்கரு. ஆனால், அவர்களின் கனவு வெவ்வேறு விதங்களில் நிறைவேறுகிறது. எந்த பதற்றமும் அலுப்பும் இல்லாமல் திருப்பங்களை மட்டுமே நம்பாமல் சுவாரஸ்யமாக இருப்பதுதான் இப்படத்தின் பலம்.
தற்போது 'பெங்களூர் டேஸ்' தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரீமேக் ஆகிறது. ஆர்யா, சித்தார்த், சமந்தா மற்றும் நித்யா மேனன் இணைந்து நடிக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. 'பொம்மரிலு' பாஸ்கர் இப்படத்தை இயக்குகிறார்.
சமந்தா '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆர்யா 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படங்களின் படப்பிடிப்புகள் முடிந்ததும் 'பெங்களூர் டேஸ்' ரீமேக்கில் நடிக்க உள்ளனர்.