பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்தின் டீஸர் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பின்னணி இசை வேலை இன்னும் முடியவில்லை என்பதால் பாண்டிராஜ் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சிம்புவே தயாரித்து வரும் படம் 'இது நம்ம ஆளு'. நகரம் சார்ந்த கதைக்களத்தில் சிம்புவுடன் இணைந்து சூரி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தானம் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
'வல்லவன்' படத்துக்குப் பிறகு சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் படம் இது. காதல் முறிவுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் , 'இது நம்ம ஆளு' படத்தின் மீது கணிசமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு, படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. பொங்கலுக்கு டீஸர் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இசையமைப்பாளர் குறளரசன் பின்னணி இசை வேலையை இன்னும் முடிக்காமல் இருக்கிறார்.
இது குறித்து பாண்டிராஜ் ட்விட்டரில் '' பொங்கலுக்கு 'இது நம்ம ஆளு' டீஸர் வருது. ஆனா, பின்னணி இன்னும் வரலை. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? '' என கேட்டதோடு, சிம்புவுக்கும், குறளரசனுக்கும் டேக் செய்துள்ளார்.