தமிழ் சினிமா

என்னை அறிந்தால் ரிலீஸ் பிப்.5-க்கு தள்ளிவைப்பு

ஸ்கிரீனன்

இம்மாதம் 29-ம் தேதி வெளியாகவிருந்த 'என்னை அறிந்தால்' திரைப்படம், பிப்ரவரி 5-ல் தான் ரிலீஸாகும் என்று ஐங்கரன் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'என்னை அறிந்தால்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.

பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட இப்படம், ஜனவரி 21-ம் தேதி சென்சாருக்கு விண்ணப்பிக்கப்பட்டு 29-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அறிவித்தார்.

இந்நிலையில், 'என்னை அறிந்தால்' படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியிருக்கும் ஐங்கரன் நிறுவனம், "எங்களிடம் 'என்னை அறிந்தால்' திரைப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது " என்று ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

பின்னணியில் என்ன நடந்தது என்று விசாரித்த போது, "'என்னை அறிந்தால்' படத்தை சென்சாருக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். சென்சார் தரப்பில் இருந்து படத்தை எப்போது பார்க்க இருக்கிறார்கள் என்று கூறவில்லை. மேலும், படத்தின் இறுதிகட்டப் பணிகள் என்பது இன்னும் முடியவில்லை" என்றார்கள்.

எதனால் இப்படத்தை மேலும் தள்ளிவைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT