தமிழ் சினிமா

திருட்டு டிவிடிக்கு எதிராக புலன் விசாரணை 2 டீம் புதிய வியூகம்

ஸ்கிரீனன்

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் நடித்திருக்கும் 'புலன் விசாரணை 2' படத்தை இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்துக்கு திருட்டு டிவிடி கட்டுப்படுத்தும் நோக்கில் முதலிலேயே படக்குழு போலீஸ் அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள்.

இதுமட்டுமன்றி, திருட்டு டிவிடி கட்டுப்படுத்தும் நோக்கில் படக்குழுவும் சில முன்னேற்பாடுகளை செய்திருக்கிறது. அது குறித்து ஆர்.கே.செல்வமணி கூறியது:

"இப்போது எல்லாம் ஒரே திரையரங்கில் இருந்து படத்தை காப்பி பண்ணுவது கிடையாது. காட்சிகளை ஒரு திரையரங்கிலும், சத்தத்தை இன்னொரு திரையரங்கிலும் எடுத்துக்கொண்டு இரண்டையும் சேர்த்து திருட்டுத்தனமாக டிவிடி தயாரிக்கிறார்கள். இதனால் அதை எடுப்பவர்களை கண்டுபிடிப்பது ரொம்ப சிரமமாக இருந்தது.

'புலன் விசாரணை 2'-ல் நாங்கள் ஒரு புது தொழில்நுட்பம் மூலமாக எந்தத் திரையரங்கில் இருந்து படத்தை காப்பி பண்ணுகிறார்கள், சத்தத்தை காப்பி பண்ணுகிறார்கள் என்று அந்த திரையரங்கிற்கு பக்கத்தில் இருக்கிற செல்போன் டவர்வில் உள்ள சிக்னல்கள் காட்டிக் கொடுத்துவிடும். அதே மாதிரி காப்பி பண்ணியதை எங்கு வைத்து சேர்க்கிறார்களோ, அதற்கு பக்கத்தில் இருக்கிற செல்போன் டவரில் உள்ள சிக்னல்கள் காட்டிக் கொடுத்துவிடும்.

இதனால் திருட்டு டிவிடி தயாரிப்பவர்களை எளிதாக பிடித்துவிடலாம். அதேமாதிரி டிவிடியை யாராவது வாங்கி இன்னொரு டிவிடிக்கு காப்பி பண்ணினால் கூட அதுக்கு பக்கத்தில் இருக்கிற செல்போன் டவர் சிக்னல் காட்டிக்கொடுத்துவிடும். யாருமே தப்பிக்க முடியாது.

இந்த சிக்னலை எடுத்துக்கொள்ள நாங்களே படத்தின் பிரதியில் மூன்று இடங்களில் மார்க் வைத்திருக்கிறோம். அது யாருடைய கண்ணுக்கும் தெரியாது. பொதுவாக தமிழ்ப் படங்களின் டிவிடிக்கள் வெளிநாடுகளில் இருந்துதான் வருகிறது என்று நிறைய பேர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதனால், நாங்கள் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை. அதே போல், தமிழ்நாட்டில் மட்டும் 250 திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறோம். வேறு எந்த மாநிலத்திலும் வெளியிடவில்லை. பாண்டிச்சேரி தான் திருட்டு டிவிடி தயாரிப்பதில் தலையிடமாக இருக்கிறது" என்று தெரிவித்தார் ஆர்.கே.செல்வமணி

SCROLL FOR NEXT