24 வருட திருமண வாழ்க் கைக்கு பிறகு நானும் இயக்குநர் பிரியதர்ஷனும் முழு மனதுடன் பிரிய முடி வெடுத்துள்ளோம் என்று நடிகை லிஸ்ஸி கூறினார்.
இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என்று இந்திய சினிமாவில், குறிப்பாக மலையாள சினிமாவில் முக்கிய ஆளுமையாக இருப்பவர் பிரியர்தஷன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களை இயக்கியுள்ளார். பாசில் இயக்கிய பல மலையாளப் படங்களை இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார். தமிழில் ‘கோபுர வாசலிலே’, ‘சிறைச்சாலை’, ‘சிநேகிதியே’, ‘காஞ்சிவரம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
நடிகை லிஸ்ஸி மலையாள சினிமாவில் அறிமுகமானவர். இவர் தமிழில் ‘விக்ரம்’, ‘மனசுக்குள் மத்தாப்பு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரும், பிரியதர்ஷனும் காதலித்து கடந்த 1990-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இருவரும் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதுபற்றி நேற்று மாலை நடிகை லிஸ்ஸி செய்தி வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளோம். எங்களது இந்த முடிவை எங்களின் குழந்தைகளும், நண்பர்களும் அறிவார்கள். இந்த கடினமான காலத்தில் அனைவரும் எங்களின் கவலை அறிந்து, எங்களின் தனியுரிமையை மதித்து செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.