'சண்டைக்கோழி' படக் கூட்டணியான இயக்குநர் லிங்குசாமி - நடிகர் விஷால் மீண்டும் இணைய திட்டமிட்டுள்ளனர்.
விஷால், மீரா ஜாஸ்மின் இணைப்பில், லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் 'சண்டைக்கோழி'. இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இடையே இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் இணைய இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியானது.
லிங்குசாமி வெவ்வேறு படங்களை இயக்க ஆரம்பித்தார். இறுதியாக இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'அஞ்சான்' மோசமான விமர்சனங்களைப் பெற்றது.
கார்த்தியுடன் அடுத்த படத்தில் இணைய இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். தற்போது விஷாலை சந்தித்து பேசியிருக்கிறார் லிங்குசாமி. விஷாலும் மீண்டும் இணைந்து பணிபுரியும் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
'சண்டைக்கோழி' இரண்டாம் பாகமா அல்லது வேறு படமா என்பது விரைவில் தெரியவரும். ஆனால் கண்டிப்பாக 'சண்டைக்கோழி 2' தான் என்கிறார்கள்.
கார்த்தியோடு இணையவிருக்கும் படம் குறித்து கேட்டபோது, "ஒரே நேரத்தில் இரண்டு படத்திலும் பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறார் லிங்குசாமி. 'ஆம்பள', சுசீந்திரன் இயக்கவிருக்கும் படம் ஆகியவற்றை முடித்துவிட்டு, லிங்குசாமி படத்தில் பணியாற்றுவார் விஷால்" என்றார்கள்.