ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
‘லிங்கா’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி, ‘முல்லைவனம் 999’ படத்தின் இயக்குநர் ரவிரத்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். தனது ‘முல்லைவனம் 999’ படத்தின் கதையைத் திருடி, ‘லிங்கா’ படத்தைத் தயாரித்திருப்பதாகவும், இதனால் கதையைத் திருடிய குற்றத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ‘லிங்கா’ படக் குழுவினர் மீது வழக்கு பதிய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் ரவிரத்தினம் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து நடிகர் ரஜினிகாந்த், லிங்கா திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமரன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர். ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘40 ஆண்டுக்கும் மேலாக திரையுலகில் இருந்துவருகிறேன். எனது புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வெளிவராத ஒரு படத்தின் கதை பதிப்புரிமை தன்னுடை யது என மனுதாரர் கூறியுள்ளார். யூ டியூப்பில் சிறிதாக வெளியான கதையை வைத்துக்கொண்டு, முழு கதையும் இதுதான் எனக் கூற முடியாது. ‘லிங்கா’ படத்தின் கதை என்னவென்று தெரியாமல் வெறும் ஊகத்தின் அடிப்படையில் தனது ‘முல்லைவனம் 999’ படத்தின் கதை என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.
கதை திருட்டு குறித்து மனுதாரர் தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில் எது மாதிரியான நிவாரணம் கோருகிறார், சட்டரீதியாக என்ன எதிர்பார்க்கிறார் என்பது தெரியவில்லை.
மனுதாரரின் முக்கியமான கோரிக்கை, ‘லிங்கா’ படத்தின் கதைக்கு தனக்கு காப்புரிமை உண்டு என்பது. இதுபோன்ற பிரச்சினைகள் சிவில் விவகாரம் சம்பந்தப்பட்டது. இப்பிரச்சி னைக்கு சிவில் நீதிமன்றத்தில்தான் பரிகாரம் தேட முடியும். ரிட் மனுவில் தீர்வு கேட்க முடியாது. எனவே, மனுதாரரின் மனுவை விசாரிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.