கதை திருட்டு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் உட்பட ‘லிங்கா’ படக் குழுவினர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் ரவிரத்தினம். ‘முல்லைவனம் 999’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ படத்துக்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில், ‘முல்லைவனம் 999 படத்தின் கதையைத் திருடி, லிங்கா படத்தை தயாரித்திருப்பதால், ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கதாசிரியர் பொன்குமரன் மற்றும் படக் குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த மனு டிச.3-ல் தனி நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, ‘கதை திருட்டு என்பது இருவர் இடையிலான தனிப்பட்ட பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கு சிவில் நீதிமன்றத்தில்தான் பரிகாரம் தேட வேண்டும். ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது’ என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரவிரத்தினம் நேற்று முன்தினம் மேல்முறையீடு செய்தார். அதில், ‘எனது மனுவுக்கு பதிலளித்து நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவில், ‘லிங்கா’ படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பொன்குமரன் எழுதுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘லிங்கா’ படத்தின் கதையை பொன்குமரன் எழுதியிருப்பதாகவும், படத்தின் திரைக்கதையை தான் எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இருவரது பதில் மனுக்களில் முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகளை தனிநீதிபதி கருத்தில் கொள்ளவில்லை.
கதை திருட்டு தொடர்பான உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு போலீஸாருக்கு உத்தரவிடுவதற்கு, ரஜினிகாந்த், ரவிக்குமார் ஆகியோரது பதில் மனுக்களில் உள்ள முரண்பாடே போதுமானது. எனவே, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, கதை திருட்டு தொடர்பாக ‘லிங்கா’ படக் குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு திங்கள்கிழமை முதல் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.