நடிகர் வடிவேலுவை தெலுங்கு அமைப் பினர் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து ‘தெனாலிராமன்’ படம் தொடர் பான விவகாரம் முடிவுக்கு வந்தது.
நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியாகவுள்ள ‘தெனாலிராமன்’ படத்தில் தெலுங்கு மன்னர் கிருஷ்ணதேவராயரை காமெடியாக காட்டியிருப்பதாக கூறி சில தெலுங்கு அமைப்பினர் அப்படத்தை வெளியிட தடைகோரி வந்தனர். இந்நிலையில் புதன்கிழமை ‘தெனாலிராமன்’ படக்குழுவினரும், தெலுங்கு அமைப்பினரும் சேர்ந்து பட விவகாரம் தொடர்பாக பேசி சமரச முடிவை எடுத்துள்ளனர்.
இது குறித்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் வடிவேலு கூறியதாவது:
என்னுடைய காமெடியை பலரும் ரசிக்க முக்கிய காரணமே என் உடல்மொழிதான். என்னுடைய இந்த உடல்மொழி எந்த மொழிக்கும் பகையானது அல்ல. ‘தெனாலிராமன்’ படத்தை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கவில்லை. நாம் எல்லோரும் சகோதரர்கள். எல்லா மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதை தமிழ் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். ‘தெனாலிராமன்’ விஷயத்தில் எல்லோரும் கூடி சமரசம் ஏற்படுத்தியதற்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்புத் தலைவர் ஜெகதீஸ்வர் ரெட்டி கூறியதாவது:
‘தெனாலிராமன்’ படம் தொடர்பாக தமிழ் தெலுங்கு மக்களிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் நல்ல முறையில் படம் வெளிவருவதற்கு எல்லோரும் உதவ வேண்டும் என்றும் தமிழ்நாடு கவர்னர் ரோசய்யா அறிவுரை கூறினார். அவரது அறிவுரையின் பேரில் தெலுங்கு அமைப்பினர் கூடி சமரச முடிவெடுக்க சம்மதித்தோம். அதன்படி நடிகர் வடிவேலு உள்ளிட்ட ‘தெனாலிராமன்’ படக்குழுவினரை புதன்கிழமை சந்தித்தோம். படத்தில் கிருஷ்ணதேவராயர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வசனங்கள் வரும் காட்சிகள் மௌனிக்கப்படும் என்று படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள். அதேபோல படத்தின் தொடக்கத்தில் ‘இந்தக் கதை யாரையும் குறிப்பிட்டு எடுக்கப்படவில்லை’ என்ற வாசகம் இடம்பெறவும் செய்வதாக கூறியிருக்கிறார்கள். தெலுங்கு அமைப்பினருக்கு ‘தெனாலிராமன்’ படத்தினை திரைக்கு வருவதற்கு முன்பே திரையிட்டு காட்டுவதாகவும் கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சமரச பேச்சுவார்த்தையின்போது அனைத்திந்திய தெலுங்கு சம்மேளனத் தலைவர் சி.எம்.கே ரெட்டி, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவைத் தலைவர் பாலகுருசாமி உள்ளிட்ட தெலுங்கு அமைப்பினர் அருகில் இருந்தனர்.