'லிங்கா' படத்தின் வசூல் நிலவரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. திருச்சி மற்றும் தஞ்சாவூர் விநியோகஸ்தரான சிங்காரவேலன், "'லிங்கா' படத்தை வாங்கி வெளியிட்டதால் தனது பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் ரஜனியை சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் இதற்காக பாதுகாப்பு வேண்டும்" என்று கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. 22ம் தேதி காலை ராகவேந்திர திருமண மண்டபத்திற்கு சென்று சிங்காரவேலன் மனு அளிக்கவில்லை. இது குறித்து சிங்காரவேலனிடம் கூறும்போது, "எங்களுக்குத் தாங்க முடியாத அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. எங்களால் இதை சமாளிக்கவே முடியாது. மேலும் தொடர்ந்து நாங்கள் இந்த சினிமா துறையில் இருக்கவே முடியாத சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
திரையரங்க உரிமையாளர்களிடம் நாங்க டெபாசிட் வாங்கித்தான் படத்தைக் கொடுத்திருக்கிறோம். இப்போ அவங்க நஷ்டத் தொகையைத் திரும்ப கேட்கிறார்கள். நாங்கள் கொடுக்கவில்லை என்றால், அவங்க சங்கம் மூலமாக எங்களுக்கு தடை உத்தரவு போடுவார்கள். பிறகு நாங்கள் விநியோகம் செய்ய விரும்புற அடுத்த படங்களுக்கு திரையரங்கம் கொடுக்க மாட்டார்கள். எங்களோட சினிமா தொழிலே காலியாகி விடும். நாங்க இந்த நஷ்டத்தை எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கொடுத்தவர்களிடம் தான் கேட்க முடியும்.
அதுக்கு முன்னாடி, இந்த விஷயத்தை ரஜினியின் கவனத்திற்கு கொண்டு போகணும்னு நினைத்தோம். அதற்காக தான் நேரடியாக பேட்டி கொடுத்தேன். அது மாதிரியே ரஜினி சாரின் கவனத்திற்கு எங்க போராட்டம் போயிருக்கிறது.
தற்போது வேந்தர் மூவிஸ் தரப்பில் இருந்து "கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு படம் கண்டிப்பாக பிக்-அப் ஆகும். ஆகையால் புதன்கிழமை வரை காத்திருக்கவும்" என்று கூறியிருக்கிறார்கள். ஆகையால் புதன்கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். புதன்கிழமைக்கு பிறகு படம் சரியாக போகவில்லை என்றால், ரஜினி அனைவரையும் சந்திக்க இருப்பதாக என்னிடம் வேந்தர் மூவிஸ் மதன் தெரிவித்தார்” என்றார்.