தமிழ் சினிமா

இளையராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகி மியூசிக் புகார்

செய்திப்பிரிவு

இசையமைப்பாளர் இளையராஜா சட்டத்திற்கு புறம்பாகச் செயல்படுவதாக, அகி மியூசிக் நிறுவனம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளது.

தனது பாடல்கள் பதிவுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கமாறு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளையராஜா ஏற்கெனவே புகார் செய்திருந்தார். அதில் பி.நரசிம்மன், ‘அகி மியூசிக் பிரைவேட் லிமிடெட்’ அகிலன் லட்சுமண், கிரி டிரேடிங் கம்பெனி, அபிஷேக் ரங்கநாதன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் கடைகளிலும், இணையதளங்கள் மூலமாகவும் தனதுஇசையமைப்பில் உருவான பாடல் பதிவுகளை இப்போதும் முறைகேடாக விற்பனை செய்து வருகின்றனர் என்றும் சென்னை ஐகோர்ட் மூலம் இதற்கு தடை உத்தரவு பெற்றிருப்பதாகவும் இளையராஜா அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அகி மியூசிக் நிறுவனம் போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

"2007 எங்களுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு 2011 வரையிலும் எங்களை வியாபாரம் செய்யவிடாமல் தடுத்ததோடு அல்லாமல் 2013 இல் எங்கள் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் போதே எங்களுக்கு தெரியாமல் வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டு எங்களை விட்டுக்கொடுக்கும் படி கேட்டுக்கொண்டார். வேறு வழியின்றி அவருக்கு எதிராக நாங்கள் வழக்குத் தொடரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

அந்த வழக்கு ஒரு வருடத்திற்கு மேலும் நிலுவையில் உள்ள நிலுவையில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி 2014 எங்களுடன் எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை என்று பொய் தகவல் அளித்து எங்களுக்கு எதிராக தடையுத்தரவு பெற்றதொடு, 2010 இல் எங்களுடன் அவர் பாடல்கள் சம்பந்தமாக ஒப்பந்தம் செய்திருப்பதாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு நேரடி அறிக்கை அளித்துவிட்டு இன்று அதையும் மறுத்து வருகிறார்.

எங்கள் தரப்பு விவாதங்களை நீதிமன்றத்தில் வழங்கி தீரப்புக்காக காத்திருக்கும் நிலையில், சட்டத்திற்கு புறம்பாக பொய்புகார்களை போலிசாரிடம் வழங்கி எங்கள் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அராஐகமாக நடந்ததோடு, பிற இசையமைப்பாளர்களின் மற்றும் தயாரிப்பாளர்களின் பாடல்களைக் கூட நாங்கள் விற்க முடியாத வகையில், எங்கள் அலுவலகத்தையும் வியாபரத்தையும் முடக்கி இருக்கிறார்.

எந்த ஆதாரங்களும் அற்ற நிலையில் தினம் தினம் பொய்ப் பிரச்சாரங்களின் மூலம் பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டு எங்களின் நற்பெயரை களங்கப்படுத்துவதோடு, பிற இசையமைப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எங்கள் மீது நம்பிக்கை இழக்கும்படி செய்து வருகிறார். பல தயாரிப்பாளர்களிடம் நேரிடையாக நாங்கள் ஒப்பந்தம் இட்டிருக்கும் அவரது பிற பாடல்களுக்கும் சட்டவிரோதமாக உரிமை கொண்டாடுவதோடு, அவருக்கு உரிமை இல்லாத அந்த சிலப்பாடல்களையும் அவர் நிறுவனத்தின் மூலம் வெளியீடு செய்து, தயாரிப்பாளர்களுக்கும் எங்களுக்கும் பெறும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்.

அம்புலி, மாலுமி, தாண்டவகோனே, ஆஆஆஆ, தீக்குளிக்கும் பச்சை மரம், செங்காத்து பூமியிலே போன்ற பல சிறு தயாரிப்பாளர்கள மற்றும் இசையமைப்பாளர்களின் பாடல்களை வெளிட்டு ஆதரவு அளித்துவரும் எங்களை களங்கப்படுத்தி சட்டவிரோதமாக எங்கள் வியாபாரத்தை முடக்குவதன் வழி பிற தயாரிப்பாளர்களுக்கும் இசையமைப்பாளரகளுக்கும் பல வழிகளில் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார்.

அது மட்டுமல்லாது, இளையராஜாவை நாங்கள் ஏமாற்றி வருகிறோம், திருடர்கள், நேர்மையற்றவர்கள் என்று அவரது அதிகாரப்பூர்வ முகநூல் ரசிக மன்றத்தின் வழியும் பத்திரிக்கை மூலமும் செய்திகள் பரப்பி அவரது ரசிகர்களிடத்தில் எங்கள் மீது வெறுப்பையும் கோபத்தையும் உண்டுபண்ணிவருகிறார்கள். இதை நம்பிவரும் சில ரசிகர்கள் அந்த முகநூலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொலை மிரட்டலகளும் விடுகிறார்கள்.

அதனால் எங்கள் ஊழியர்களும் அவர்கள் குடும்பத்தினர்களும் தினம் பயத்துடன் இருந்து வருகிறார்கள். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவரது புகழையும் செல்வாக்கையும் பயன்படுத்தி இது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுவதால் வேறு வழியின்றி எங்கள் பாதுகாப்பு, வியாபாரம் மற்றும் எங்கள் நற்பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று அகி மியூசிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அகிலன் லெட்சுமணன் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT