‘லிங்கா’ படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதுதொடர்பாக சென்னை சாலி கிராமத்தில் உள்ள பாலாஜி ஸ்டுடியோஸ் நிறுவன இயக்குநர் ஆர்.கார்த்திகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தெலுங்கில் சீரஞ்சீவி, சோனாலி பிந்த்ரே நடித்து வெளியான ‘இந்திரா’ படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான உரிமையை எங்கள் நிறுவனம் பெற் றுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கி நடிகர் ரஜினி காந்த் நடித்து 12-ம் தேதி வெளிவரும் லிங்கா திரைப்படத்தின் கதை, திரைக் கதை, வசனம், கதாபாத்திரங்கள், பாடல்கள் அனைத்தும் ‘இந்திரா’ படத்தைப் போலவே இருப்பதாக எனக்கு நம்ப கமான தகவல் கிடைத்துள்ளது. இப்படம் வெளியானால் எங்கள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.
எனவே, லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அட்வகேட் கமிஷனரை நியமித்து, இப்படம் வெளி யாவதற்கு முன்பு எங்களுக்கு இப்படத்தை திரையிட்டுக் காட்டுவதற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு லிங்கா பட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
தெலுங்கு படம் ‘இந்திரா’வைப் போலவே ‘லிங்கா’ படம் எடுக்கப் பட்டிருப்பதாக மனுதாரர் கூறு வதை ஏற்க முடியாது தணிக்கை செய்யப்பட்ட லிங்கா படத்தை மனுதாரர் பார்க்கவில்லை.
இந்திய எல்லையில் உள்ள நீர்த்தேக்கம் அல்லது அணை தொடர்பாக தனிப்பட்ட யாரும் உரிமை கோர முடியாது. இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட அணையை அடிப்படையாகக் கொண்டு கற்பனையாக கதை யொன்றை உருவாக்குவதற்கு ஒவ்வொரு எழுத்தாளருக்கும் உரிமை உள்ளது.
‘இந்திரா’ படத்தைப் போலவே ‘லிங்கா’ படம் உருவாக்கப் பட்டிருப்பதற்கான ஆவணங்களை மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை. மிகுந்த பொருட்செலவில் ‘லிங்கா’ படம் கடந்த 6 மாதங்களாக தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போ தெல்லாம் எதிர்ப்புத் தெரி விக்காமல், படம் வெளியாக இருக் கும் நிலையில் தடை கோருவது படக்குழுவினரை மிரட்டுவது போலாகும். மனுதாரரின் கோரிக் கையில் துளிகூட உண்மை இல்லை. அடிப்படை ஆதாரமும் இல்லை. அதனால் அட்வகேட் கமிஷனர் முன்பு ‘லிங்கா’ படத்தை திரையிட்டுக் காண்பிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. எனவே, மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப் பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா, படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்து, வழக்கு விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதுபோல, தனது ‘உயிர் அணை’ என்ற கதையை ‘லிங்கா’ படத்தின் எழுத்தாளர் பொன்குமரன் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
எனவே, ‘லிங்கா’ படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில் எழுத்தாளர் சக்திவேல் தாக்கல் செய்த மனுவை நீதிபதி கோவிந்தராஜ் நேற்று விசாரித்து, விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.