காவ்யாவிற்கு இதயம் தேவைப்படுகிறது என்ற வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு தற்போது இதயம் கிடைத்திருப்பதால் ஆர்.ஜே.பாலாஜி மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்.
'பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனம்' என்ற பெயரில் யு-டியூப் தளத்தில் கணக்கு ஒன்றினைத் தொடங்கி, தன்னை பாதித்த விஷயங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இதில் வரும் வீடியோக்கள் அனைத்துமே அவர் தனது ஐ-போன் வீடியோவில் எடுத்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு "சச்சினை திட்டுகிறார் ஆர்.ஜே.பாலாஜி" என்ற பெயரில் வீடியோ ஒன்றினை வெளியிட்டார் பாலாஜி. அவ்வீடியோவில் சச்சினை என்ன திட்டி இருக்கிறார் என்று பார்த்தவர்கள் அனைவருமே நெகிழ்ந்து போனார்கள்.
காரணம், அவ்வீடியோ பதிவில் வேலூரில் உள்ள காவ்யா என்ற குழந்தையுடன் கலந்துரையாடி விட்ட பிறகு, அக்குழந்தையைப் பற்றி பேசியிருப்பார். "வேலூரில் உள்ள காவ்யா என்ற இக்குழந்தைக்கு பிறந்ததில் இருந்தே, இதயத்தில் ஒட்டை இருக்கிறது. நாட்கள் ஆக ஆக இதயம் பலவீனமாகி தற்போது இதயக் கோளாறின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். அவருக்கு தேவை பணம் அல்ல. தேவை ஒரு இதயம்" என்று நெகிழ்ச்சியுடன் பேசிவிட்டு ஏன் இந்த வீடியோவிற்கு சச்சினை திட்டுகிறேன் என்று தலைப்பு வைத்திருக்கிறேன் என்பதற்கு விளக்கமும் கொடுத்தார். (அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)
ஆர்.ஜே.பாலாஜியின் காவ்யா சம்பந்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. பல்வேறு தரப்பினரும் சச்சினை எப்படி ஆர்.ஜே.பாலாஜி திட்டலாம் என்று போட்டு வீடியோவை மேலும் வைரலாக்கினார்கள்.
தற்போது காவ்யாவிற்கு இதயம் கிடைத்து, ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இது குறித்து ஆர்.ஜே.பாலாஜி, "இதை நம்பமுடியவில்லை. நம் பிரார்த்தனைகளுக்கு அதி விரைவில் பலன் கிடைத்திருக்கிறது. கடவுளுக்கு மிக்க நன்றி. காரணம், காவ்யாவுக்கு இதயம் தானமாக கிடைத்திருக்கிறது. காவ்யாவுக்கு மாற்று இதயம் தேவைப்படுவது குறித்து நாம் உருவாக்கிய வீடியோவை பார்த்துவிட்ட தமிழ்நாடு மாற்று உறுப்பு தேவைப்படுவோர் பதிவேட்டில் அவரது பெயருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு முதலிடத்தில் வைக்கப்பட்டது. அதன் விளைவாக அவருக்கு மாற்று இதயம் கிடைக்கப்பெற்று இன்று அதிகாலை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் செய்யும் வேலையின் நிமித்தம் இத்தகைய மகிழ்ச்சியை, ஆத்ம திருப்தியை நான் இதுவரை பெற்றதில்லை. மனிதத்தையும், அன்பையும் பரப்ப 'ஊடகத்தை' பயன்படுத்த முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.