தமிழ் சினிமா

நீங்களும் ஆகலாம் பிரியாணி ஹீரோ: ஆர்.ஜே. பாலாஜியின் புது ரூட்!

ஸ்கிரீனன்

ரேடியோவில் புதிய வடிவில் நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யும் ஆர்.ஜே. பாலாஜி இணையத்திலும் பரவலாக கவனத்தை ஈர்ப்பவர். யூடியூப் தளத்தில் பஞ்சுமிட்டாய் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரில் புதிய நிகழ்ச்சிகளை ஆரம்பித்திருக்கிறார்.

ரேடியோவில் புதிய வடிவில் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியவர் ஆர்.ஜே. பாலாஜி. 'வடகறி' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார். படங்களை விமர்சனம் செய்யும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு வந்ததால், அந்நிகழ்ச்சியை நிறுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்தி படங்களுக்கு விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.

தற்போது யூடியூப் தளத்தில் பஞ்சுமிட்டாய் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரில் கணக்கு ஒன்றைத் தொடங்கி, அதில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ பதிவு இணையதள வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

'Kai Phone Video 01 | RJ Balaji's Biriyani !!!' என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அந்த வீடியோவில் (இணைப்பு கீழே) முதலில் பிரியாணி சாப்பிட்டு விட்டு, 10 பிரியாணி பார்சல்களை வாங்குகிறார். அதனைத் தொடர்ந்து ரோட்டில் இருக்கும் ஏழைகள் மற்றும் இயலாதவர்களுக்கு அந்த பிரியாணியை அளிக்கிறார்.

10 பிரியாணியையும் அளித்து விட்டு, "எதற்காக இந்த பிரியாணி கொடுத்தேன் என்றால், ஒரே ஒரு விஷயம்தான். வட இந்தியாவில் ஒருவர் இதே போன்று 1000 ரூபாய் நோட்டை எல்லாருக்கும் எடுத்து எடுத்து கொடுத்தார். வாங்கினவர்கள் முகத்தில் செம சந்தோஷம். அப்போ இது காப்பி தான் அடித்தியா என்றால் ஆம் காப்பி தான் அடித்தேன். படமே காப்பி தான் அடிக்கிறார்கள். அதைப் போய் நாம் யாராவது கேட்கிறோமா. நல்ல விஷயத்தில் காப்பி அடித்தால் தப்பில்லை.

வீடியோ இல்லாமல் கொடுத்திருக்கிலாமே என்றால் அவ்வாறு கொடுத்தால் நான் கொடுத்தது என்னோடு முடிந்து போயிருக்கும். உலகம் முழுவது எனக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் எனக்கு இருக்கிறார்கள் (நக்கலாக சிரித்துக்கொள்கிறார்). இந்த வீடியோவைப் பார்த்து யாராவது 2 பேர் பிரியாணி கொடுத்தார்கள் என்றால் சந்தோஷமே.

இணையத்தில் சில நாட்களுக்கு நிறைய சேலஞ்ச் எல்லாம் போட்டார்கள். ஐஸ் பக்கெட் சேலஞ்ச், மரம் நடும் சேலஞ்ச் எல்லாம் பண்ணி போட்டோ எடுத்து போட்டார்கள். அதற்கு பிறகு தண்ணீர் ஊற்றியது யார்? யாருமே பண்ணியிருக்க மாட்டார்கள். எந்த சேலஞ்ச் பண்ணினாலும், ஒரு வாரத்திற்கு மேல் உயிர் கிடையாது.

நாலு பேரோட பசியைப் போக்கவே இதை பண்ணினோம். இதை நீங்க பண்ணனும், நான் இவங்களை எல்லாம் பண்ணச் சொல்கிறேன் என எதுவும் கிடையாது. உங்களுக்கா பண்ணலாம் என்று தோனினா, கையில் 100 அல்லது 200 ரூபாய் மிச்சம் இருந்தால் பிரியாணி வாங்கி கொடுங்கள்.

இந்த வீடியோவில் என்னை அறியாமல் தன்னூத்து கிராமம் என்று கூறிவிட்டேன். இதைப் பார்த்து விஜய் ரசிகர்கள் தயவு செய்து அசிங்க அசிங்கமாக கத்தாதீர்கள். ஏன் நீ அத்திப்பட்டி கிராமத்தை சொல்லவில்லை என்று அஜித் ரசிகர்களும் அசிங்கமாக திட்டாதீர்கள். இது உங்களுக்கான சண்டையில்லை. நீங்கள் சண்டைப் போடுவதுவதற்கு பதிலாக நாலு பேருக்கு சோறு போடுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT