நாயகர்களுக்கு எல்லாமே தட்டில் வைத்து தரப்படுகிறது என்று 'ராட்சசி' படம் தொடர்பாக ஜோதிகா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
புதுமுக இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில், ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ராட்சசி'. பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில், அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
ஜுலை 5-ம் தேதி வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் வசூல் ரீதியாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “ ’ராட்சசி’ படத்தை முதல்நாளை விட இரண்டாம் நாள் 40 சதவீத ரசிகர்கள் அதிகம் பார்த்துள்ளனர். வசூலில் சூப்பர் ஹிட் என்பதற்கு தெளிவான அறிகுறி. உங்களைப் பொழுதுபோக்கும் எங்கள் முயற்சியை ஒவ்வொரு முறையும் ஏற்றுக்கொண்டு ஆதரிக்கும் ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
'ராட்சசி' படம் தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், பெரிய நாயகர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜோதிகா. அப்பேட்டியில், “எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். சினிமாவின் தாக்கம் அவள் மீது எப்படி இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அவள் கண்ணியமானவளாக வளர வேண்டும் என்றால், சரியான மதிப்புகள் கற்றுத் தரப்பட வேண்டும். அது சினிமாவின் மூலமாக இருந்தாலும் சரி. குழந்தைகளுக்கு எப்போதும் பழங்களைவிட சாக்லெட்டுகள் பிடிக்கும் என்பதால், அதையே நாம் கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா?
இயக்குநர்கள், நடிகர்கள் புகழுக்காக, வியாபாரத்தைப் பெரிதாக்க, சினிமாவின் சாரத்தைக் குறைத்து விடுகின்றனர். 80 சதவீத கமர்ஷியல் படங்கள் பொழுதுபோக்குக்காக மட்டுமே எடுக்கப்படுகின்றன. அனைத்திலும் ஒரே கதைதான். வசூல் குறைவாக இருந்தாலும், நல்ல சினிமா எடுப்பது முக்கியம். அது அரங்கில் 15 பேரை பாதித்தாலும் நம் முயற்சிக்குக் கிடைத்த பலன்தான்.
நாயகர்களுக்கு எல்லாமே தட்டில் வைத்து தரப்படுகிறது. ஒரு பெரிய நாயகர், படம் வெளியாவதற்கு முன்பே பாதி வெற்றிபெற்று விடுகிறார். ஏனென்றால், பெரிய இசையமைப்பாளர் இசையமைப்பார். பாடல்கள் ஹிட் ஆகிவிடும். ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள், தங்களுக்குப் பழக்கமான சூழலிலிருந்து வெளியே வந்து, பெண்ணை மையமாக வைத்து உருவாகும் படத்துக்கு இசையமைத்தால் எவ்வளவு அழகாக இருக்கும்?
எனக்கு ஒரு கதை பிடித்துப்போனால் உடனடியாக என் கணவர் சூர்யாவின் கருத்தைத்தான் கேட்பேன். முடிவெடுப்பது நானாக இருந்தாலும், சூர்யா ஒருமுறை கதையைக் கேட்டுக் கருத்து சொல்வதை நான் விரும்புகிறேன். அவர் இயக்குநரின் அந்தக் கதையை எப்படி இன்னும் பெரிதாக்கலாம், இன்னும் என்னவெல்லாம் சேர்க்கலாம் என்று யோசனைகள் சொல்வார். அவர் ஒருமுறை கதையைக் கேட்டுவிட்டால், எனக்கு திருப்தியாக, நிம்மதியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் ஜோதிகா.