தமிழ் சினிமா

கே.எஸ்.ரவிக்குமாரின் வேகம்: இயக்குநர் ஷங்கர் புகழாரம்

ஸ்கிரீனன்

கே.எஸ்.ரவிக்குமாரிடம் இருந்து எவ்வளவு வேகமாக படம் எடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் இயக்குநர் ஷங்கர்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'லிங்கா' இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, "புகழ்வதற்கு நமக்கு ஆசையும், உரிமையும் இருக்கிறது. அதை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று திறமை அவரிடம் மட்டுமே இருக்கிறது. அவரோடு பழகி இருக்கிறேன். சில கேள்விகள் நான் கேட்க மாட்டேன். எல்லா கேள்விகளையும் கேட்பது அநாகரீகம்.

ரஜினிக்கும் எனக்கும் கூட ஒரு இடைவெளி வேண்டும் என்று நினைப்பேன். அவரை அறிந்தவரையில், அவருடைய உள்ளத்தை என்னால் அறிய முடியவில்லை. ரஜினியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் கருவி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பதில் கால் நூற்றாண்டு கழிந்துவிட்டது. எந்தொரு முடிவையும் ரஜினியின் மீது திணிக்க முடியாது. அவர் முடிவெடுத்தால் யாரும் தடுக்க முடியாது" என்றார் வைரமுத்து.

இயக்குநர் ஷங்கர் பேசும்போது, " 'லிங்கா' படத்தில் பணிபுரிபவர்கள் டபுள் படையப்பா என்று சொல்கிறார்கள். படத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் பார்க்கும்போது 'சிவாஜி' படத்தில் பார்த்த ரஜினியைப் பார்க்க முடிகிறது. இந்தப் படத்தோட வியாபாரம் 'எந்திரன்' பட வியாபாரத்தை தாண்டிவிட்டது என்று சொன்னார்கள். அனைத்திற்கும் காரணம் ரஜினி தான். கே.எஸ்.ரவிக்குமாரிடம் இருந்து எவ்வளவு வேகமாக படம் எடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார் ஷங்கர்.

SCROLL FOR NEXT